கேரள மாநிலம், கருவட்டா அருகே 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் மாவட்டம், பரவூர் பகுதியைச் சேர்ந்த சிவன்குட்டி செட்டியார் (65), தனது மனைவி மற்றும் பேத்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களாக வீடு பூட்டியிருந்த நிலையில், சிவன்குட்டி சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கைகள் மற்றும் கால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வீட்டில் மிளகாய்த்தூள் சிதறிக் கிடந்ததுடன், அலமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.
முதலில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளைக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. ஆனால், குடும்பத்தினரின் பேச்சுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
சிவன்குட்டியின் 13 வயது பேத்தி, தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து கொலையைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை விற்று, தனக்கு ஐபோனும், நண்பர்களுக்கு மோட்டார் சைக்கிள்களும் வாங்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
செல்போன் பயன்படுத்துவது, இரவு நேரங்களில் தாமதமாக வீட்டுக்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக சிவன்குட்டி பேத்தியை அடிக்கடி கண்டித்ததாகவும், இதனால் அவர்மீது சிறுமிக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
கொல்லத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவர்களுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்களுடன் இணைந்து கொலைக்கு திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கொலை செய்வது தொடர்பான பல்வேறு காணொளிகளை அவர்கள் செல்போனில் பார்த்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவன்குட்டியின் மனைவி, மகளின் பிரசவத்துக்காக மருத்துவமனையில் இருந்த நேரத்திலேயே இந்தக் கொலை நடந்துள்ளது. இதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாத சூழலை பயன்படுத்திக் கொண்டு கொலை திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.


