International
oi-Vigneshkumar
தைபே: உலகளவில் செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலனை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தைவான் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு தைவான் நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தலா NT$10,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஏஐ முதலீடுகளும் கூட முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட நாடுகள் மிக பெரியளவில் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அப்படி அசுர வளர்ச்சியை அடையும் நாடுகளில் ஒன்று தைவான்!

மக்களுக்கு பணம்
இந்தச் சூழலில் தான் தைவான் அரசு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஏஐ வளர்ச்சியால் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மக்களுக்கே வழங்க போகிறார்களாம். தைவான் அதிபர் லாய் சிங்-தே இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த பணத்தை வழங்குவதற்காக NT$235.7 பில்லியன், அதாவது சுமார் 70,846 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அரசின் வருவாய் அதிகரித்துள்ளதால் இந்த தொகையை புதிய கடன் வாங்காமல் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சி காரணமாக தைவான் நாட்டிற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. ஏனென்றால் அதிநவீன சிப்கள், சர்வர்கள் மற்றும் கம்யூட்டர் உபகரணங்களுக்கு தேவை உலகளவில் அதிகரித்துள்ளது. இவை பெரும்பாலும் தைவான் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தைவானின் தொழில்நுட்ப துறை குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதன் காரணமாகவே 2026ம் ஆண்டின் முதல் பாதியில் தைவானின் பொருளாதாரம் 14.15 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2026ல் தைவான் 11.05 சதவீதமாக வளர்ச்சி அடையும் என தைவான் அரசு கணித்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தைவான் நாடு அடைந்த மிக பெரிய வளர்ச்சி இதுவாகும். தைவான் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்திருந்தாலும் இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பதிவு செய்ததே இல்லை. ஏஐ காரணமாகவே குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சியை தைவான் பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி, தைவானின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு துறைகளும் பயனடைந்துள்ளன. இருப்பினும், இந்த பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைத்து மக்களுக்கும் சமமாக சென்றடையவில்லை என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. அதாவது ஒட்டுமொத்த வளர்ச்சியின் பலனும் தொழில்நுட்ப துறைக்கே போய் இருக்கிறதாம்.
தைவான் அரசு
தொழில்நுட்ப துறைக்கு வெளியே சர்வீஸ் செக்டார், பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். அவர்களுக்கு இதனால் பெரியளவில் பலன் கிடைக்கவில்லையாம். இதை கருத்தில் கொண்டே பொருளாதார வளர்ச்சியின் பலனை அவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தைவான் அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
கல்வி, முதியோர் பராமரிப்பு, குடும்ப செலவுகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களில் பொருட்களை வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு மக்கள் இந்த பணத்தை பயன்படுத்தலாம் என தைவான் அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த தொகை யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. யார் இதற்கு தகுதியானவர்கள், பணம் எப்படி வழங்கப்படும், எந்த தேதியில் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களை தைவான் அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
முதல்முறை
இதற்கு முன்பும் 2025ம் ஆண்டில் தைவான் மக்களுக்கு NT$10,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அமெரிக்க வரிகள் மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது முதல்முறையாக பொருளாதார வளர்ச்சியின் பலனை பகிரும் வகையில் தைவான் அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

