இருப்பினும், இலங்கை மீது நேரடி சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளைத் தவிர்க்கும் நோக்கில் பொருட்கள் பிற நாடுகளின் வழியாகத் திசை திருப்பப்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலி வலையமைப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இலங்கையும் இந்தியாவும் பெயரிடப்பட்டுள்ளன.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகம் (Office of Trade and Manufacturing Policy), உலகளாவிய வர்த்தக ஓட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“The Great Transshipment Scam” (பாரிய மறுஏற்றுமதி மோசடி) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, சீனாவிலிருந்து வரும் பொருட்கள் அதிக வரி விதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு, இடைநிலை நாடுகள் வழியாக அமெரிக்கச் சந்தையை அடையும் முறையை விவரிக்கிறது.
இதில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இத்தகைய “நிழல் மறு ஏற்றுமதி வலையமைப்பில்” (Shadow Transshipment Network) ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கை “Tier 3” (மூன்றாம் நிலை) பொருளாதார நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மூலோபாய புவியியல் இருப்பிடம், தளவாட உள்கட்டமைப்பு, சேமிப்பு வசதிகள் மற்றும் மலிவான உழைப்புச் செலவு ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து “தென்கிழக்கு ஆசிய மைக்ரோஹப்கள்” (Southeast Asian Microhubs) என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் இலகுரக உற்பத்தி, ஏற்றுமதி செயலாக்கம் மற்றும் பிராந்திய விநியோகம் போன்ற பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இருப்பினும், இலங்கை மீது நேரடி சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கையில் இந்தியா “Tier 1” (முதல் நிலை) நாடாக, அதாவது பெரிய அளவிலான தொழில்துறை தளங்களைக் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ (Peter Navarro), இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். வரிகளைத் தவிர்ப்பதற்காக இந்தியாவைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, மின்னணுப் பொருட்கள், சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் இரும்புப் பொருட்கள் போன்ற துறைகளில் இந்திய ஏற்றுமதிகள் இனி அமெரிக்க சுங்கத்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
இந்த மறுஏற்றுமதி மோசடியின் காரணமாக ஆண்டுக்கு 40 பில்லியன் முதல் 303 பில்லியன் டொலர் வரை வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 19 பில்லியன் முதல் 34 பில்லியன் டொலர் வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனப் பொருட்கள் இடைநிலை நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குறைந்தபட்ச செயலாக்கம், மறுபெயரிடல் அல்லது மறுபேக்கிங் செய்யப்பட்டு, அந்த நாட்டின் தயாரிப்பாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றன.
இந்த வரி ஏய்ப்பைக் கண்டறிய அமெரிக்கா “Detective Border” என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

