சுங்கை பெசார்:
சிலாங்கூர், சுங்கை பெசார் நகரம் அருகே கிள்ளான் – தெலுக் இந்தான் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் 49 வயதுள்ள உள்ளூர் ஆண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று மாலை 6:36 மணியளவில் இது குறித்து அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஜால் அஸ்பார் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்குச் (JPS) சொந்தமான ‘Nissan X-Trail’ வாகனம் ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சுயநினைவின்றி இருப்பது கண்டறியப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, பொதுமக்கள் காரின் கதவைத் திறந்துள்ளனர்.
மருத்துவப் பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
சுங்கை பெசார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொண்ட குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக உடற்பரிசோதனைக்காகச் சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



