EPS-95 ஓய்வூதியம் உயர்வு? ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றதா மத்திய அரசு?
இந்தியாவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகையில் ஒரு பகுதி ஓய்வூதியத்திற்கு செல்கிறது. ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதிய தொகையாக இந்த பணம் வழங்கப்படுகிறது. இதை தான் EPS-95 ஓய்வூதியம் என அழைக்கின்றனர்.
தற்போது EPS-95 ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகை 1000 ரூபாயாக தான் உள்ளது. தற்போதுள்ள விலைவாசியில் 1000 ரூபாய் ஓய்வூதியம் போதவில்லை ஒரு சிலிண்டர் எடுத்தாலே இந்த பணம் காலியாகிவிடுகிறது, மருத்துவ செலவுகளுக்கு கூட போதவில்லை என ஓய்வூதியதாரர்கள் கவலைப்படுகின்றனர்.

EPS-95 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை, தற்போதுள்ள 1,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசு இந்த கோரிக்கையை ஏற்று எப்போது குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை உயர்த்தும் என லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து மக்களவையில், கேள்வி எழுப்பப்பட்டது, அதில் EPS-95 ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதா என எம்பி ஒருவர் வினவினார். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் கோரப்பட்டன.
இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பிஎஃப்-இல் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்தும் எந்தத் திட்டமும் தற்போது அரசிடம் இல்லை என கூறினார். தற்போதுள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 1,000 ரூபாயாகவே தொடரும் என கூறினார்.
EPS-95 திட்டமானது ஒரு நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு (Defined Contribution) மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பலன் (Defined Benefit) அடிப்படையில் செயல்படும் ஒரு திட்டம் என கூறியுள்ளார். இதில் ஊழியரின் ஊதியத்திலிருந்து 8.33% மற்றும் மத்திய அரசு 1.16% பங்களிப்பை வழங்குகின்றன. ஓய்வூதிய நிதி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதால், அரசின் நிதி சுமையையும் எதிர்கால கடன்களையும் கணக்கில் கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் அரசின் பட்ஜெட் ஆதரவு மூலமே வழங்கப்படுகிறது தற்போதைக்கு இதனை உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் பணவீக்கம், மருத்துவ செலவுகள் மற்றும் வாழ்க்கை செலவுகளை கருத்தில் கொண்டு பார்த்தால் 1,000 ரூபாய் என்பது மிக குறைவு என கூறும் ஓய்வூதியதாரர்கள், தேசிய போராட்ட குழு சார்பில் இது தொடர்பாகப் பெரிய அளவிலான போராட்டங்களையும் நடத்தினர்.
இந்தியாவில் மார்ச் 31 நிலவரப்படி, சுமார் 85,84,604 ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெற்று வருகின்றனர். மொத்தம் 15,819.28 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
