அமெரிக்காவை ஏமாற்ற இந்தியாவை கேடயமாக்கும் சீனா..!! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்..!!
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நீடிக்கிறது. அமெரிக்க அரசாங்கம் சீனாவின் பல்வேறு பொருட்களுக்கும் தொடர்ச்சியாக பல விதமான வரிகளை விதித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சந்தையை கைவிட கூடாது என்பதற்காக சீனா இந்தியாவை ஒரு கேடயமாக பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா விதிக்கும் அதிகப்படியான இறக்குமதி வரிகளிலிருந்து தப்பிக்க, சீன பொருட்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை ‘தி கிரேட் டிரான்ஷிப்மென்ட் ஸ்கேம்’ (The Great Transhipment Scam) என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த குள்ள நரித்தனத்தால் அமெரிக்க அரசுக்கு ஆண்டுக்கு 19 பில்லியன் டாலர் முதல் 26 பில்லியன் டாலர் வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சீனா தனது பொருட்களை நேரடியாக அமெரிக்காவிற்கு அனுப்பாமல், இந்தியா, மெக்சிகோ, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா போன்ற 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி, அங்கு பேக்கிங் செய்தோ, லேபிள்களை மாற்றியோ அல்லது சிறிய அளவிலான மாற்றங்களை செய்தோ, அவற்றை அந்தந்த நாட்டு பொருட்கள் போல அமெரிக்காவிற்கு அனுப்புவதாக அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இந்த 40 நாடுகளை மூன்று அடுக்குகளாக (Tiers) அமெரிக்கா பிரித்துள்ளது. இதில், இந்தியா ‘Tier 1’ என்ற பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. புனே-குஜராத்-சென்னை தொழில் மண்டலத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பம்புகள் மற்றும் கம்ப்ரசர்கள் மூலம் சீன பொருட்கள் அமெரிக்காவில் நுழைவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. புனேயிலிருந்து இந்திய பொருளாக வெளியேறும் ஒரு சீன நிறுவனத்தின் பம்புகள் அமெரிக்காவின் சின்சினாட்டி போன்ற நகரங்களில் உள்ள தொழில் உற்பத்தி வாய்ப்புகளை தடுக்கிறது என நவரோ கூறியுள்ளார்.
இந்நிலையில் சீனாவின் மோசடிகளை தடுக்க சரக்கு கப்பல்களை அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பே கண்காணித்து, சந்தேகத்திற்குரிய பொருட்களை கண்டறிய டிடெக்டிவ் பார்டர் (Detective Border) எனும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதில் கண்டெய்னர்கள் அதில் உள்ள பொருட்கள் கண்காணிக்கப்படும்.
இதில் ஏதேனும் நிறுவனங்கள் அல்லது நாடுகள் வர்த்தக மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட அந்த சரக்குக்கு மட்டுமல்லாமல், கடந்த ஓராண்டு முழுவதும் அந்த நிறுவனம் அனுப்பிய அனைத்து சரக்குகளுக்கும் பின்தேதியிட்டு அபராத வரி வசூலிக்கப்படும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இனிவரும் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களிலும் இந்த வர்த்தக மோசடியைத் தடுக்கும் ‘Anti-transhipment’ விதிகள் கட்டாயமாக்கப்படும். இந்தியா போன்ற நாடுகள் சீனாவுக்கு உதவும் வகையில் வர்த்தகத்தை மேற்கொண்டால், அவை அமெரிக்க சந்தையில் பெற்றுள்ள முன்னுரிமை மற்றும் வர்த்தக சலுகைகளை இழக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா சீனா மீது வர்த்தக போரை தொடங்கி பல பொருட்களுக்கும் அதிகபட்ச வரியை விதித்தது. அதன்பிறகு, சீன நிறுவனங்கள் வரி செலுத்தாமல் அமெரிக்க சந்தையை அடைய இத்தகைய வழிகளை பின்பற்றி வருவதாக வெள்ளை மாளிகை கருதுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
