ஜார்ஜ் டவுன்:
பினாங்கு, ஜாலான் மக்காலிஸ்டரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது MPV வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 36 வயது பெண் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று உணவகம் ஒன்றின் வெளியே ஆள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது அந்த MPV வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக வடகிழக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரொசாக் முகமட் தெரிவித்துள்ளார்.
MPV வாகனத்தை ஓட்டிச் சென்ற 36 வயதுப் பெண், வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த அப்பெண் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது.
இவ்விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிப் பெரும் கவனத்தைப் பெற்ற நிலையில், இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் (அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்கி மரணத்தை விளைவித்தல்) காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



