இந்தியாவை ஆளும் டாப் 3 குடும்பங்கள்! ஒவ்வொரு நாளும் ரூ.4,000 கோடி சொத்து சேர்த்த அதிசயம்! அம்மாடியோ!
அவ்வப்போது பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் அறிக்கைகளாக வெளியிடப்படும். அதை படிக்கும் நமக்கு தலையே சுற்றும். அப்படித்தான் சமீபத்தில் “பார்க்லேஸ் மற்றும் ஹுருன் இந்தியா” ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாத நிலவரப்படி முன்னணி தொழிலதிபர் குடும்பங்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியானது. அறிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த 3 முன்னணி குடும்பங்கள் முதல் 3 இடத்தில் உள்ளன.
முதல் 3 இடத்தைப் பிடித்த பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு: இந்தியாவைச் சேர்ந்த அம்பானி குடும்பம், குமார் மங்கலம் பிர்லா குடும்பம் மற்றும் ஜிண்டால் குடும்பம் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன. இந்த 3 குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.42 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பங்குச்சந்தை மதிப்போடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதத்திற்கு சமமாகும்.

அறிக்கையின்படி ரூ.25.8 லட்சம் கோடி சொத்து மதிப்போடு அம்பானி குடும்பம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ.8.1 லட்சம் கோடி சொத்து மதிப்போடு இரண்டாவது மதிப்பு மிக்க குடும்பமாக உள்ளது. ஜிண்டால் குடும்பம் ரூ.8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 1 வருடத்தில் இந்த மூன்று குடும்பங்களின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.57 லட்சம் கோடி வரை அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அவர்களுடைய மொத்த மதிப்பு 444 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ. 42 லட்சம் கோடியாகும்.
முதல் 3 இடத்தைப் பிடித்த குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்ப வணிகத்தை கையில் எடுத்துக்கொண்டு உயர்ந்தவர்கள். ஆனால் குடும்ப வணிகங்களுக்கு மாற்றாக தங்களுடைய சொந்த முயற்சியில் வந்தவர்களின் பட்டியலில் அதானி குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கௌதம் அதானி குடும்பம் ரூ.19.57 லட்சம் கோடி குடும்ப சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பாரதி மிட்டல் ரூ.12.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான திலீப் சங்கவி ரூ.4.54 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் குடும்பத்தின் சொத்து மதிப்பு 74.7% அதிகரித்துள்ளது. இதனால் அக்குடும்பம் 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல ஹச்சிஎல் நிறுவனத்தின் நாடார் குடும்பம் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி குடும்பம் ஆகியவை 8-வது மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளன. ஆனால் முன்பை விட இவர்களுடைய சொத்து மதிப்பு சற்றே சரிந்துள்ளது. HCL குழுமத்தின் சொத்து மதிப்பு 38 சதவீதம் சரிந்துள்ளது. விப்ரோ குடும்பம் 2.3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இந்தியாவில் தொழில் செய்யும் முன்னணி 300 குடும்ப வணிகங்களின் மொத்த சொத்து மதிப்பு 1.46 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்புக்கு பார்த்தால் ரூ.138 லட்சம் கோடி ஆகும். இந்த 300 குடும்ப வணிகங்களின் மொத்த மதிப்பு உலக அளவில் பல நாடுகளின் ஜிடிபி-ஐ விட அதிகம் எனக் கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த குடும்பங்களின் சொத்து ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.4,076 கோடி வரை அதிகரித்திருக்கிறது
