உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
மற்றும் வடமாகாண உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த
விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் முக்கியத்துவம்
தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம்
ஏற்பாடு செய்யப்பட்டது.
விபத்து ஒன்றின் காரணமாக ஏற்படும் கடுமையான தலைக்காயம் அல்லது மூளையில்
திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு, மூளைச் சிதைவு போன்ற காரணங்களால் சில
சந்தர்ப்பங்களில் மூளையின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நிரந்தரமாகவும் மீள
முடியாத வகையிலும் செயலிழக்கக்கூடும்.
உறுப்பு தானம்
இவ்வாறு மூளையின் செயல்பாடுகள் முழுமையாகவும் நிரந்தரமாகவும்
நிறுத்தப்பட்டிருப்பது மருத்துவ ரீதியான உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்பட்டால், அந்த நிலை மூளைச்சாவு (Brain Death) என அழைக்கப்படுகிறது.

மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயம் உள்ளிட்ட சில உறுப்புகள், செயற்கை சுவாசம்
மற்றும் தீவிர சிகிச்சை உதவிகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
தொடர்ந்து இயங்கக்கூடும். இதனால் அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம்
ஏற்படலாம்.
ஆனால் மூளைச்சாவு என்பது மீள முடியாத நிலையாகும். மூளை மீண்டும்
செயல்படச் செய்வதற்கான சிகிச்சை அந்நிலையில் இல்லை.
எனவே, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர
சிகிச்சையின் நோக்கம் மூளையை மீண்டும் செயல்படச் செய்வது அல்ல.
இதயம் ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச்செய்யும்
சட்டரீதியான
நடைமுறைகளுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்திற்கும் அமைவாக, தானம்
செய்யக்கூடிய உறுப்புகளைப் பாதுகாத்து, அவற்றை உறுப்பு மாற்றுச் சிகிச்சை
தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய
நோக்கமாக அமைகிறது.

ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரமான தருணத்திலும், அவரது உறுப்புகள்
மூலம் பலருக்கு புதிய வாழ்வை வழங்க முடியும்.
ஒருவரின் சிறுநீரகம் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கலாம். இதயம்
ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச் செய்யலாம். கல்லீரல், நுரையீரல்
உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையாக
அமையலாம்.
“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” என்ற உயரிய
எண்ணத்துடன் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
உறுப்பு தானம் என்பது வெறும் தானம் அல்ல; அது ஒரு மனிதன் மறைந்த பின்னரும்
மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வாழ்வதற்கான உன்னதமான மனிதநேயச்
செயல்.
உறுப்புகளை தானம் செய்வோம் – உயிர்களை காப்போம்!
மரணத்திற்குப் பின்னரும் மனிதநேயத்தால் வாழ்வோம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

