ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு செக்.. டிப்ஸ் கேட்கும் நடைமுறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு..!!
இந்தியாவில் தற்போது ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளை பயன்படுத்தி தான் நாம் ஆட்டோ, பைக், கார் உள்ளிட்ட சேவைகளை பெறுகிறோம். இவ்வாறு வண்டி புக் செய்யும் போது அந்த செயலியிலேயே ஓட்டுநருக்கு டிப்ஸ் வழங்குவதற்கான ஆப்ஷன்கள் வருகின்றன.
ஏற்கனவே இந்த செயலிகளில் ஆட்டோ, கார் புக் செய்தாலே ஓட்டுநர்கள் அதில் காட்டும் தொகையை விட கூடுதலாக 50 ரூபாய் வேண்டும் என்று தான் கேட்பார்கள். அது இல்லாமல் பயணம் தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் (Advance Tip) கோருவது மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்த வலியுறுத்துவது போன்ற ஆப்ஷன்கள் காட்டும். இதில் அதிகபட்ச தொகையை நாம் தேர்வு செய்தால் தான் அந்த டிரிப்பை ஓட்டுநர்கள் எடுப்பார்கள்.

ஆட்டோ, கார் முன்பதிவு செயலிகளில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களிடம், முன்பதிவு செய்யும் போதே Advance Tip, Choose an Add-on மற்றும் கூடுதல் டிப்ஸ் வழங்கினால் ஓட்டுநர்கள் பயணத்தை உடனே உறுதி செய்ய வாய்ப்புள்ளது என்பன போன்ற தகவல்கள் காட்டும். இதுபோன்ற நடைமுறைகள் பயணிகளை தவறாக வழிநடத்துவதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி கூடுதல் பணம் பெறப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு ‘மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள், 2025’ (Motor Vehicle Aggregator Guidelines, 2025)-ன் கீழ் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி டிப்ஸ் வழங்குவது என்பது ஒரு பயணியின் முழு விருப்பத்திற்கு உட்பட்டது. இதை ஒரு பயணி பயணம் முடிந்த பிறகு மட்டுமே செய்ய வேண்டும். பயணம் தொடங்குவதற்கு முன்போ அல்லது பயணம் நடைபெறும்போது இடைப்பட்ட நேரத்திலோ டிப்ஸ் கேட்பதற்கான எந்தவொரு ஆப்ஷனும் செயலியில் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.
டிப்ஸ் வழங்கினால் விரைவாக கேப் கிடைக்கும், ஓட்டுநர் பயணத்தை உறுதி செய்ய வாய்ப்பு அதிகம் என்பது போன்ற தவறான அல்லது மக்களை தூண்டும் வகையிலான எந்தவொரு செய்தியோ, கூடுதல் விருப்பங்களோ (Add-ons) செயலியின் இடைமுகத்தில் இடம்பெறக்கூடாது என தெரிவித்துள்ளது.
இத்தகைய டிப்ஸ் வழங்கும் வசதிகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019க்கு முரணாகவும், தவறான வழிநடத்தலாகவும் இருப்பதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயணிகள் மனமுவந்து வழங்கும் அந்த டிப்ஸ் தொகை முழுவதும் எந்தவித பிடித்தமும் இன்றி அப்படியே ஓட்டுநருக்கு சென்றடைய வேண்டும் என அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
தங்கள் செயலிகளில் இத்தகைய வசதிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக மறுஆய்வு செய்து மாற்றங்களை செய்யுமாறு அனைத்து செயலிகளுக்கும் மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால், அது விதிகளுக்கு எதிரான செயலாக கருதப்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வாடகை வாகன கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதையும், பயணிளை தேவையற்ற நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

