– கல்வி நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல்
கொலொன்னாவ பிரதேசத்தில் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அமைச்சரவைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி காரணமாக கொலொன்னாவ பிரதேசத்தில் மக்கள் முகங்கொடுத்துள்ள நிலைமை பற்றி தேடிக் கண்டறிவதற்கு ஜனாதிபதி 2024.06.03 அன்று பிற்பகல் அப்பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் யோசனைகளுக்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள கொலொன்னாவ பிரதேச மக்களுக்கும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கும் உணவு விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழங்கல்
• கொலொன்னாவ பிரதேச செயலக பிரிவில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்குக் காரணமாகவுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக நீக்குதல், காணிகளை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் பிரதேசத்தில் வடிகாலமைப்பு தொகுதியை தூய்மையாக்கல் உள்ளிட்ட ஏனைய அனைத்து படிமுறைகளையும் மேற்கொள்ளல்
•குறித்த பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு மூல காரணங்களை அடையாளங்கண்டு எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை முன்மொழிவதற்கும் கொலொன்னாவ பிரதேச செயலக எல்லைக்குள் காணப்படுகின்ற காணிகளை உயர்ந்தபட்சம் பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொலொன்னாவ நகரத்தை மீண்டும் திட்டமிடுவதற்காக விரிவான அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்காக கொழும்பு மாவட்ட செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்தல்
2. தெரிவு செய்யப்பட்ட தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திர தேவையை நீக்குதல்
2024.05.01 திகதியளவில் திருத்தம் செய்யப்பட்ட 126 இயைபு முறைக் குறியீடுகளின் (HS Code) கீழ் வகைப்படுத்தப்பட்ட, உணவாக உட்கொள்ளப்படும் தெரிவு செய்யப்பட்ட தானிய வகைகள் மற்றும் பண்டங்களின் வகைகள் இறக்குமதி உரிமம் பெற வேண்டிய தேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், திருத்தம் செய்யப்பட்ட 53 இயைபு முறைக் குறியீடுகளுக்கமைய இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதி பத்திரம் வழங்குதல் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்படும் இலாபமீட்டும் (கறுப்புச் சந்தை செயன்முறை) முறையை அடியோடு ஒழித்தல், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் தானியங்களின் இறக்குமதியை தடுத்தல், முறைகேடான மற்றும் அநீதியான முறையில் மேற்கொள்ளப்படும் தானிய இறக்குமதியை தடுத்தல், நுகர்வோர் தாங்கிக் கொள்ளக்கூடிய விலையை உறுதிப்படுத்துதல் மற்றும் பொருத்தமான வரி விகித அளவு, சுகாதார தனிமைப்படுத்தல் முறைகளை விதிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாத்தல் ஆகிய பல்வித நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன், தானிய வகைகளை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதி தேவையை நீக்குதல் உகந்தது என தெரியவருகிறது.
அதற்கமைய, ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர், பொது திறைசேரியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அடங்கிய குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை கருத்திலெடுத்து தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையினால் வழங்கப்பட்ட தேசிய தாவர தனிமைப்படுத்தல் உரிமத்தை சமர்ப்பிப்பதன் அடிப்படையில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் விதந்துரைக்கு அமைய உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து பயறு, உழுந்து, கௌபி, குரக்கன், சோயா மா மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய தேவையை நீக்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. பரிஸ் உடன்படிக்கையின் 6 ஆவது பிரிவை இலங்கையில் அமுல்படுத்துதல்
காலநிலை மாற்றம் தொடர்பான சட்ட ரீதியான கடப்பாட்டுடனான சர்வதேச உடன்படிக்கையான பரிஸ் உடன்படிக்கை 2015 ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்தின் தரப்பாளர்கள் பங்குபற்றும் 21 ஆவது மாநாட்டில்; (COP 21) 196 தரப்பினரால் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை 2016ம் ஆண்டில் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.
உலகளாவிய சாதாரன வெப்பநிலை அதிகரித்தல் முன் கைத்தொழில் மட்டத்தை விடவும் 02 பாகை செல்சியசை விடவும் கூடாத மட்டத்தில் பேணுதல் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு முன் கைத்தொழில் மட்டத்தை விடவும் 1.5 செல்சியஸ் வரை மட்டுப்படுத்துதல் பரிஸ் உடன்படிக்கையின் பிரதான குறிக்கோள் ஆகும். அந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு அமைய, தரப்பு நாடுகளால் “தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (NDCs) இலக்குகள்” அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதற்காக 02 சந்தைப் பொறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் தரப்பு நாடுகளில் பசுமை வாயுவை குறைப்பதன் பெறுபேற்றை இருதரப்பாக பரிமாற்றம் செய்வதற்கும், அவ்வாறான பசுமை வாயு பரிமாற்றத்தை அறிக்கை செய்வதற்காகவும், தரப்பு நாடுகளில் தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை அடைவதற்காக பாவிப்பதற்குமான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
அத்துடன், அந்த உடன்படிக்கை மூலம் புதிய சர்வதேச காபன் குறைப்பு பொறிமுறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிலமையின் கீழ் இலங்கை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்தின் டுபாய் பிராந்திய ஒத்துழைப்பு நிலையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் காபன் சந்தை மூலோபாய மற்றும் வழிகாட்டல் கோட்பாடுகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன், இந்த ஆண்டின் இறுதியளவில் அந்த கருமங்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
அதனிடையே பசுமை வாயு வெளியேற்ற குறைப்புக்காக இலங்கை அறிமுகம் செய்துள்ள மின்சார, கைத்தொழில், கழிவு முகாமைத்துவம், போக்குவரத்து, விவசாயம் மற்றும் வனங்கள் ஆகிய பிரதான துறைகள்தொடர்பாக பல்வேறு திட்ட அபிவிருத்தியாளர்களால் திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. காபன் சந்தை மூலோபாய மற்றும் வழிகாட்டல் கோட்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை அந்த திட்ட முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து தீர்மானங்களை எட்டுவதற்காக சுற்றாடல் அமைச்சு செயலாளரின் தலைமையில் ஒரு குழுவை நியமிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. கல்வித் துறையில் மாற்றம் செய்வதற்காக கல்வி நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல்
நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சமமான அணுகல் வசதிகள் மற்றும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் “2048 ஆண்டில் முழுமையாக அபிவிருத்தியடைந்த இலங்கை” எனும் நோக்குக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கைச் சட்டகம் 2023-2033 மூலம் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீண்டகால கற்றல் முறையை உறுதி செய்வதற்காக நிறுவன கட்டமைப்பு, பாடவிதானங்கள் மற்றும் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய கல்வி கொள்கைச் சட்டகத்தை தயாரித்தல் தொடர்பாக ஜனாதிபதியின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் விதந்துரையின் அடிப்படையில் முழுமையான கல்வி மறுசீரமைப்பை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனாக அமுல்படுத்துவதற்கு பொருத்தமான நிர்வாக கட்டமைப்பை நிறுவும் நோக்கத்துடன் பின்வரும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் பாடசாலைகளை வகைப்படுத்துதல்.
09 கல்வி மறுசீரமைப்பு அலகுகளை 09 மாகாணங்களில் நிறுவுதல்.
வலய கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை விஞ்ஞான மற்றும் முன்னுரிமை ஒழுங்கின் அடிப்படையில் 100 தொடக்கம் 122 வரை கட்டங்களாக அதிகரித்தல்.
பாடசாலை மேற்பார்வை, ஆசிரியர்கள் மேற்பார்வை மற்றும் பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளின் செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தற்போதுள்ள 314 கோட்டக் கல்வி அலுவலகங்களையும் உள்ளடக்கி 350 பாடசாலை சபைகளை நிறுவுதல்.
தெரிவு செய்யப்பட்ட ஒன்று அல்லது சில இரண்டாம் நிலை பாடசாலைகளை முன்னுரிமைப் பாடசாலைகளாக பெயரிட்டு 8 தொடக்கம் 12 பாடசாலைகளை உள்ளடக்கிய கொத்தணி பாடசாலைகளை உருவாக்கி, முழுமையான பாடசாலை கட்டமைப்பை 1,220 கொத்தணி பாடசாலைகளில் இணைத்தல்.
இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு தேவையான அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
5. 2032 பிரிஸ்பென் ஒலிம்பிக் போட்டியை இலக்காக கொண்டு பாடசாலை மட்டத்தில் விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமைகளை விருத்தி செய்வதற்காக அரச – தனியார் கூட்டிணைவு நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துதல்
இலங்கை 2032 பிரிஸ்பென் ஒலிம்பிக் போட்டியில் “பதக்கங்களை வெல்லும் நாடு” என உறுதிபூண்டு தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை 2028 ஆண்டில் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற செய்து குறிப்பிடத்தக்க அடைவு மட்டத்தை பெறுவதற்காக அவர்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய, அந்த குறிக்கோளை அடைவதற்கான உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கல்வி அமைச்சர் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. இரத்தினபுரி புதிய நகரிலுள்ள காணித்துண்டை சப்ரகமுவ மாகாண சபைக்கு வழங்குதல்
இரத்தினபுரி புதிய நகரில் மாகாண சபை கட்டிட தொகுதிக்கு அருகில் ஹெல பொஜூன் உணவகத்தை நிறுவுவதற்காக ஒரு காணித்துண்டை வழங்குமாறு சப்ரகமுவ மாகாண சபையால் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்து பெறப்பட்டுள்ள 23.10 பேர்ச்சஸ் காணித்துண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த காணிக்காக அரச விலை மதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள சந்தை பெறுமதி ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த காணித்துண்டை இரத்தினபுரி பிரதேச செயலாளர் ஊடாக சப்ரகமுவ மாகாண சபைக்கு உரித்து மாற்றம் செய்யக்கூடிய வகையில் காணி ஆணையாளர் நாயகத்துக்கு விடுவிப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்றம்
நிரல் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் முதலாம் காலாண்டுக்கான அமைச்சுக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயலாற்றுகைத் தரவுகள் மற்றும் தகவல்களை மீளாய்வு செய்து கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தால் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பான செயலாற்றுகை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கைக்கமைய, 2024 ஆம் ஆண்டில் 171 பாரியளவிலான அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 09 கருத்திட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்துக் கருத்திட்டங்களும் 2026 ஆம் ஆண்டு முடிவடையும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய மூலதனக் கருத்திட்டங்களுக்காக நிதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களைத் துரிதமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, 80% வீதத்திற்கும் அதிகமான பௌதீக முன்னேற்றம் கொண்ட 58 கருத்திட்ட செயற்பாடுகள் 2024 இல் பூர்த்தி செய்வதற்கும், போதியளவு நிதியின்மையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களில் தொடர்ந்து நிதி முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் அவ்வாறான கருத்திட்டங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தேசிய செயற்பாட்டு அலுவலர் குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. பாதிப்புக்களுடன் கூடிய காலநிலை, வெள்ளம் மற்றும் மண்சரிவு பற்றிய முன்னறிவித்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை மேம்படுத்துவதற்காக உலகளாவிய வளிமண்டலவியல் அமைப்பின் தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்
மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி மற்றும் உலக வங்கி நிதி வழங்குகின்ற காலநிலையால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் குறைப்பதற்காக பலமட்டத்திலான வேலைத்திட்டப் படிமுறைகள் 03 இன் கீழ் 09 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 05 கூறுகளுடன் கூடிய குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கூறாக காலநிலை நிலைமைகளை சரியான வகையில் முன்னறிவிப்பதற்கும், மற்றும் முற்கூட்டியே மதிப்பிடுவதற்கு இயலுமாகும் வகையில் அந்தந்த நிறுவனங்களில் திறன், தொழிநுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, செயற்படுவதன் மூலம் அதிக இடர் கொண்ட காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளை மிகவும் துரிதமான துல்லியமான முன்னறிவுப்புக்களை மேற்கொள்வதற்கும், அனர்த்தங்களுக்குப் பின்னரான முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக வருடாந்தம் அரசால் செலவிடப்படும் 313 மில்லின் டொலர்கள் மதிப்பீட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும் இயலுமாகும் வகையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த கூறை நடைமுறைப்படுத்துவதற்காக வளிமண்டலவியல் மற்றும் நீர் விஞ்ஞானவியல் துறைகளில் விரிவான அனுபவங்களுடன் கூடிய மற்றும் திடீர் அனர்த்த முன்னெச்சரிக்கைத் தொகுதியை மேம்படுத்தும் தொழிநுட்ப இயலுமைகள் காணப்படுகின்ற சர்வதேச அமைப்பான உலக வளிமண்டலவியல் அமைப்பின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. குற்றவியல் வழக்குக் கோவையைத் திருத்தம் செய்தல்
குற்றவியல் வழக்குகளுக்குத் துரிமாகத் தீர்ப்பதற்கு, நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற தாமதங்களை குறைப்பதன் மூலம் வழக்குகள் திரள்வதைத் தடுத்தல், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலங்கையிலுள்ள சட்டத்தில் குற்றங்கள் தொடர்பான உடன்பாடுகளுக்கு ஏற்படுவதற்கான முறையை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் குற்றவியல் வழக்குக் கோவையைத் திருத்தம் செய்வதற்காக 2023.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச திருத்தங்களுக்கமைய வழக்கு விசாரணையில் ஆஜராவதற்குப் பதிலாக குற்றத்தை ஒப்புக்கொள்கின்ற உடன்பாடு பிரதிவாதி மற்றும் முறைப்பாட்டாளருக்கிடையே ஏற்படுத்தப்படுவதால், தண்டனைகள், அபராதம் அல்லது நட்டஈட்டுத் தொகையைக் குறைப்பதற்கான விதந்துரையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலும்.
அதற்கமைய, சட்டவரைஞரால் குற்றவியல் வழக்குக் கோவையைத் திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்;டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தாபித்தல்
சர்வதேச நடைமுறைகளை கருத்தில் கொண்டு விசேட நிபுணத்துவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் பின்னர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மிகவும் பயனுள்ள வகையில் வழி நடாத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான ஒருங்கிணைந்த முகவர் நிறுவனத்தை நிறுவுவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை, தொழில்நுட்ப அபிவிருத்திச் சபை, இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிறு வியாபார அபிவிருத்தி பிரிவு நிறுவன ரீதியாகவும் மற்றும்சட்ட ரீதியாகவும் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் சிறிய மற்றும் பாரியளவிலான தொழில் முயற்சிகளுக்காக தம்மை அர்ப்பணித்துள்ள தனி அலகாக “என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா” எனும் பெயரில் முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தை தாபிப்பதற்கும், அதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதியும், கைத்தொழில் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 2002 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சீர் பெறுமதி வரிச்சட்டத்தை திருத்தம் செய்தல்
பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் வரி விடுவிப்பை நீக்கம் செய்கின்ற எதிர்பாராத விளைவுகளை தடுத்தல், சட்டத்தின் தெளிவான தன்மையை பேணுதல் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேர்க்கப்பட்ட பெறுமதியின் அடிப்படையில் வரி மறு சீரமைப்புகளை அமுல்படுத்துவதற்காக அரச நிதி தொடர்பான செயற்குழு வழி வகைகள் தொடர்பான செயற்குழு தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறை சார் கண்காணிப்பு செயற்குழு மற்றும் பொருளாதார பாதிப்புகளை சமப்படுத்த தொடர்பான துறை சார் கண்காணிப்பு செயற்குழு உள்ளிட்ட அரச கணக்குகள் தொடர்பான செயற்குழுக்களின் தலைமையில் ஒருங்கிணைந்து ஒருங்கிணைந்த குழுவின் ஆலோசனைக் அமைவாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பெறுமதி சேர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதைந்துறைகளின் பிரகாரம் அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் பல்வேறு அமைச்சு தீர்மானங்களின் பிரகாரம் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய திருத்தங்களையும் உள்ளடக்கி 2002 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதிசேர் வரி சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. தென்மேற்கு பருவ பெயர்ச்சி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு நிவாரணம் வழங்கல்
இம்முறை தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களின் விளைவுகளாக, நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக மழைவீழ்ச்சியால் மண்சரிவு, மரங்கள் சரிந்து வீழ்தல் போன்றன பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு மோசமான வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதனால் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியின் சேவைகளை பெற்றுக் கொண்டு குறித்த ஏனைய அமைச்சுகளின் முழுமையான ஒத்துழைப்புகளுடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக துரித வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


