பெட்ரோல் கார்களை வாங்குவது இனி சரியில்லை.. மக்கள் எடுத்த முடிவு.. ஜூலை மாத டேட்டா!
இந்தியா முழுக்க E20 பெட்ரோல் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் எடுத்த முடிவு ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மக்களின் கடும் எதிர்ப்புக்களையும் கடந்து மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளை குறைப்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தால் பெட்ரோலில் உள்நாட்டில் விவசாய பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனால்-ஐ கலந்து வருகிறது.
இந்த கலப்பின பெட்ரோல் பயன்படுத்துவது மூலம் வாகனங்களின் மைலேஜ் குறைகிறது அதேபோல் வாகனங்களின் பாகங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. மைலேஜ் குறித்த விமர்சனங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு விகிதத்தை குறைக்க மறுத்துள்ளது.

இதனால் மக்கள் வாகனங்கள் வாங்குவதில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது ஜூலை மாத வாகன விற்பனை தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
FADA அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜூலை மாதம் இந்தியாவில் மொத்தம் 25.91 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 25.89 சதவீதம் அதிகம். அடுத்தாக முதல் முறையாக ஜூலை மாதம் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 19.13 சதவீதம் அதிகமாகும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு மொத்த பயணிகள் வாகன விற்பனையில் 47.62 சதவீத பங்கீட்டை கொண்டு இருந்த பெட்ரோல் – எத்தனால் வாகனங்களின் அளவீடு இந்த ஆண்டு 41.68 சதவீதமாக குறைந்துள்ளது.
மக்கள் பெட்ரோல் வாகனங்களை வாங்குவதை விடுத்து சிஎன்ஜி, ஹைப்ரிட், எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில் மாற்று எரிபொருள் வாகனங்களின் விற்பனை பெட்ரோல் வாகனங்களுக்கு கிட்டதட்ட இணையான அளவீடான 40.59 சதவீதத்தை தொட்டு உள்ளது.
இதன் மூலம் மக்கள் E20 பெட்ரோல் பிரச்சனையை சமாளிப்பதை விடுத்து மாற்று எரிபொருள் வாகனங்களை வாங்க துவங்கியுள்ளனர், இது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் சிஎன்ஜி, ஹைப்ரிட், எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பையும், அறிமுகத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தல் உள்ளது.
மத்திய அரசு E20 பெட்ரோலை தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் கார்களின் விற்பனை குறைந்து மாற்று எரிபொருள் வாகனங்களின் ஆதிக்கம் பெரும். இதேவேளையில் டீசல் வாகன விற்பனையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் தொடர்ந்து 16-17 சதவீத பங்கீட்டுடன் நிலைபெற்றுள்ளது.

