சாமானியர்களின் பாக்கெட்டை பதம் பார்க்க வரும் விலை உயர்வு! FMCG நிறுவனங்களின் புது பிளான்!
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் டீ தூள், பிஸ்கட், சோப்பு, பால் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களுடன் தான் தொடங்குகிறது. என்னதான் விலைவாசி உயர்ந்தாலும் இது போன்ற பொருட்களை வாங்காமலும் இருக்க முடியாது. விலைவாசி தொடர்ந்து உயர்கிறதே தவிர சம்பளம் உயரவில்லை என்று புலம்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் வருகின்ற செப்டம்பர் காலாண்டில் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் சில நிறுவனங்கள் 2 முதல் 5 சதவீதம் வரை.. விலையை அதிகரித்தன.

வருகின்ற செப்டம்பர் காலாண்டிலும் விலை அதிகரிப்பு இருக்கலாம் என்று சில நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. மற்ற நிறுவனங்கள் “Shrinkflation” என்று சொல்லப்படும் உத்தியை கையில் எடுக்கவுள்ளன. அதாவது நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை அப்படியே இருக்கும். ஆனால் எடை குறைந்திருக்கும். குறிப்பாக 5 மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகளின் அளவு குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டானியா நிறுவனம் 5 மற்றும் 10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடையை குறைக்கவிருக்கிறது. அதோடு சர்க்கரை மற்றும் பாமாயில் போன்றவற்றின் விலையை 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ரக்ஷித் ஹர்கேவ் தெரிவித்திருக்கிறார்.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜூன் காலாண்டில் 5 சதவீதம் வரை தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரித்தது. கச்சா எண்ணெயின் விலையில் இருக்கும் மாற்றங்களையும் இந்நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் இந்த காலாண்டிலும் விலையேற்றம் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ சுதீர் சீதாபதி கூறியுள்ளார்.
வருகின்ற ஜூன் – செப்டம்பர் காலாண்டில் பணவீக்க விகிதம் 2 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதால் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனமும் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கும் மேலாக சில நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சர்ஃப் எக்சல், ரின், புரூ காபி, பிரூக் பாண்ட், கம்பர்ட், கிளினிக் பிளஸ், இந்துலேகா, டொமக்ஸ் மற்றும் ஹார்லிக்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகள் இந்நிறுவனத்தைச் சேர்ந்தவை. மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பை பொறுத்து விலை உயர்வு இருக்கும் என்று அந்நிறுவனத்தின் சீப் எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர் பிரியா நாயர் தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு அடுத்தடுத்து விலைவாசி உயர்வு பேரிடியை தாக்கப்போகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஏற்கனவே ஏற்பட்ட விலை உயர்வின்போதும் அதை சமாளித்து வந்த மக்கள் இம்முறையும் இதை எதிர்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

