International
oi-Vigneshkumar
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சாதாரண கழிப்பறை ஒன்றுக்கு சுமார் ரூ.5.5 கோடி செலவிட்டுள்ளனர். எது டாய்லெட்டிற்கு ரூ.5 கோடியா என நீங்கள் ஷாக் ஆகலாம்.. உண்மையில் இவ்வளவு செலவு செய்ய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
ஜப்பானில் உள்ள கழிவறைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. நவீன தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு பெயர் பெற்ற ஜப்பான் கழிவறைகளில் நாம் உட்காரும்போது டாய்லெட் சீட் சூடாக இருக்கும். நீரின் அழுத்தத்தை மாற்றும் வசதி, வெதுவெதுப்பான காற்றில் உலர்த்தும் வசதி, தானியங்கி ஃப்ளஷ் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கும்.

ஜப்பான்
இதற்கிடையே இப்போது ஜப்பானில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள ஒரு பொது கழிவறை இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அதில் இருக்கும் வசதிகள் மட்டுமில்லை. மாறாக அதற்காக செலவிடப்பட்ட தொகையும் தான்.
ககாவா மாகாணத்தில் உள்ள தகமாட்சு நகரின் JR கினாஷி ரயில் நிலையத்திற்கு வெளியே இந்த நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி புதிதாக சீரமைக்கப்பட்ட இந்த டாய்லெட் திறக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை மொத்தமே தினசரி வெறும் 600 பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அருகில் உள்ள உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களே அதிகம் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
ஒரே ஒரு கழிவறை
இதற்கு முன்பு அங்கு ஒரே ஒரு பொதுவான கழிவறை மட்டுமே இருந்துள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவருமே அதை தான் பயன்படுத்த வேண்டி இருந்துள்ளது. இருப்பினும், அதன் நிலை மோசமாக இருந்ததாக உள்ளூர் மக்கள் பலரும் புகாரளித்துள்ளனர். இதையடுத்து டாய்லெட் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டாய்லெட்டில் ஆண்கள், பெண்கள் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கழிவறையின் உண்மையான சிறப்பு அதன் உள்ளே இல்லை… வெளிப்புற சுவரில்தான் உள்ளது.
பெரிய திரை
கழிவறையின் வெளிப்புறம் மிக பெரிய திரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதன் சுவர்களில் கலைப்படைப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன. வார இறுதி நாட்களில் மாணவர்கள் உருவாக்கிய வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்படைப்புகள் மாறி மாறி ஒளிபரப்பப்படுகின்றன. உள்ளூர் மாணவர்கள், இளம் படைப்பாளிகள் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் ஒரு நோக்கம் என ககாவா மாகாண அரசு தெரிவித்துள்ளது. அதாவது சாதாரணமாக மக்கள் பயன்படுத்திவிட்டுக் கடந்து செல்லும் ஒரு பொது கழிவறையை ஜப்பான் இப்படி ஒரு கலைக் கண்காட்சியாகவே மாறுகிறது.
விவாதம்
அதேநேரம் இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை தான் தற்போது உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு திட்டத்திற்கும் சுமார் 100 மில்லியன் ஜப்பானிய யென் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.5.5 கோடியாகும். ஒரு பொது கழிவறைக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டுமா என்ற கேள்வியை சில உள்ளூர் மக்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த பணத்தை நகரின் வேறு அடிப்படை வசதிகளுக்காக பயன்படுத்தியிருக்கலாம் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் மற்றொரு தரப்பினர், இந்த திட்டத்தை வெறும் கழிவறையாக பார்க்க கூடாது என்று கூறுகின்றனர். அதில் ஒளிபரப்பப்படும் கலைப்படைப்புகள் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும், இது சுற்றுலா பயணிகளையும் ஈர்ப்பதால் பொருளாதாரமும் வளர்வதாக தெரிவிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் மோசமான நிலையில் இருந்த கழிவறை, தற்போது கினாஷி ரயில் நிலையத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, மாணவர்களின் படைப்புகளை ஒளிபரப்புவது என ஏகப்பட்ட வழிகளில் பயன்படுகிறதாம்.




