தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெளிநாட்டு நன்கொடை முறைப்படுத்தல் (திருத்த) மசோதா 2026’ (FCRA Amendment Bill 2026), வெளிநாட்டு நிதியைப் பெறுவது மற்றும் அந்நிதி மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களைப் நிர்வகிப்பதில் அரசாங்கத்திற்கு மேலும் கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
நாட்டின் பாதுகாப்பு, சுயாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணவே இம்மாற்றங்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, புதுப்பிக்கப்படாவிட்டாலோ அல்லது காலாவதியானாலோ, அந்நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி மற்றும் அதைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களைப் பொறுப்பேற்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் இழந்த அமைப்புகள் மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமம் பெறத் தவறினால், வெளிநாட்டு நிதியில் உருவான நிலம், கட்டடம் போன்ற சொத்துக்கள் நிரந்தரமாக அரசின் வசம் (Consolidated Fund of India) சேரும்.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக வெளிநாட்டு நிதி பெற்ற அல்லது பயன்படுத்திய அமைப்புகளின் உரிமம் புதுப்பிக்கப்படாது.
மேலும் நிதி எங்கு, எந்த மாநிலத்தில், எந்தத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் துல்லியமாக அரசுக்கு அறிவிக்க வேண்டும். இரண்டாவது தவணை நிதிக்கு முன் கள ஆய்வுகள் (Field Inquiries) கட்டாயமாக்கப்படுகின்றன. நிர்வாகச் செலவுகளுக்கான உச்சவரம்பு ஏற்கனவே 20%-ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் சம்பளமும் இந்த 20% வரம்பிற்குள்ளேயே சேர்க்கப்படும்.
இந்த புதிய சட்டத் திருத்தம் இந்தியாவில் செயல்படும் ஆயிரக்கணக்கான உள்ளூர் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தொண்டு திட்டங்களில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வரை நிதி ஈட்ட முடியாத சிறிய கிராமப்புற தொண்டு நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை இழக்கும் அபாயம் உள்ளது. கடந்த காலத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் கட்டப்பட்டு, தற்போது உள்நாட்டு நிதியில் இயங்கி வரும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களின் உரிமம் ரத்தானால், அவை அரசாங்க அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும் நிலை ஏற்படலாம்.
திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பாக மாநில வாரியாகப் பதிவு செய்வதும், கூடுதல் கட்டணம் செலுத்துவதும், கள ஆய்வுகளுக்குக் காத்திருப்பதும் உள்ளூர் அளவில் நடக்கும் உடனடி நிவாரணம் மற்றும் கல்விப் பண தாமதங்களுக்கு வழிவகுக்கும். மனித உரிமை விழிப்புணர்வு, உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் மற்றும் அரசியல் கொள்கை ஆய்வுகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவது மேலும் கடினமாக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டாய மதமாற்றம், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடான நிதிப் பயன்பாட்டைக் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. மேலும், குற்றங்களுக்கான சிறைத் தண்டனை 5 ஆண்டுகளிலிருந்து 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சட்டம் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையின அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் எனவும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் சிவில் சமூக அமைப்புகளைக் கட்டுப்படுத்தவே அதிகாரம் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

