Last Updated:
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரத்தில் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்கு உறுதி அளித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ, பேஸ்புக் சமூக ஊடகத்தில் சிறிது நேரம் முடக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க பேஸ்புக் செயலியின் தாய் நிறுவனமான மெட்டாவின் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் மெட்டா நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு சந்தித்து பேசியது. அப்போது, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள், டீப்பேக் வீடியோக்கள், இந்திய சட்டங்களுக்கு இணங்குதல் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மார்க் ஜுக்கர்பெர்க் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


