Last Updated:
யோகா மூலம் உடல்நலத்தைப் பேணுவது போன்ற தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் பிரதமர் எம்.பி-க்களுடன் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் (NDA) சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து காலை உணவு அருந்தியபடியே கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் பாஜக தலைவர் நிதின் நபீன், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்த எம்.பி-க்கள் பலர் கலந்துகொண்டனர்.
பொது வாழ்க்கையில் எழும் ஆபத்துகள் மற்றும் தவறான பழக்கவழக்கங்கள் குறித்துப் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.
பொதுவாழ்வில் இருக்கும் போது மிகச் சிறிய தவறு கூடப் பெரிய பிரச்சினையாக மாறக்கூடும் என்று சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய நபர்களின் உபசரிப்புகளை ஏற்கக் கூடாது என்று எச்சரித்தார். மேலும், தங்களது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மற்றும் கையொப்பங்கள் தவறான நபர்களின் கரங்களுக்குச் சென்றுவிடாமல் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம், ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மக்கள் மற்றும் இளைஞர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றார். இளைஞர்களின் பிரச்சினைகளையும் கருத்துகளையும் பொறுமையுடன் கேட்டறிந்தால் மட்டுமே சரியான தீர்வுகளைக் காண முடியும் எனக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறான கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களிடம் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடாமல் நியாயமான முறையில் பேசி புரியவைக்க முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொண்டு சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவற்றுடன், தனது நெருக்கடியான பணிச் சூழலுக்கு மத்தியிலும் நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வாகிப்பது, யோகா மற்றும் உடற்பயிற்சி (Fitness) மூலம் உடல்நலத்தைப் பேணுவது போன்ற தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் பிரதமர் எம்.பி-க்களுடன் பகிர்ந்து கொண்டார்.


