சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்
சென்னையில் வட சென்னை தொகுதிக்கு ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை 234 அறைகளில் நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது
தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் தகவல் பலகையில் எழுதப்படும்
மக்களவைத் தேர்தலில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் தகவல் பலகையில் எழுதப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் தபால் வாக்கு எண்ணப்படும் என்றும், அதிக அளவிலான தபால் வாக்குகள் இருக்கும் இடங்களில் தேவைப்பட்டால் தனி அறையில் எண்ணப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தபால் வாக்குகளின் முடிவுகள் அங்குள்ள தகவல் பலகையில் தெரிவிக்கப்படும் என்றும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மக்களவைத் தேர்தலில் உலக சாதனை : தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெருமிதம்
மக்களவைத் தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வன்முறையே இல்லாத தேர்தலாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருப்பதாகவும் ராஜீவ் குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் முயற்சி : பாஜக புகார் மனு
பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி சார்பில் மனு
வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆந்திரா, ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் நாளை வெளியீடு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
இந்தியாவை ஆளப்போவது யார்? ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகளே ஆர்வம் காட்டும் நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
