International
oi-Halley Karthik
பிரசிலியா: ஈரான் போர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரானிஸின் வெற்றி ஆகியவற்றை பிரேசிலை சேர்ந்த 39 வயது நபர் சரியாக கணித்திருந்தார். இதனால் அவர் வாழும் நோஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், அடுத்து மிகப்பெரிய போர் வரப்போவதாகவும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான் நோஸ்ட்ராடாமஸ். இவர் மருத்துவராக இருந்தாலும், காலத்தை முன்கூட்டியே கணிக்கும் மாயக்காரராகத்தான் அதிகமாக மக்களிடையே அறியப்பட்டார். அவர் கணித்து சொன்னது இப்போது வரை நடப்பதாக பலரும் நம்புகின்றனர்.

வாழும் நோஸ்ட்ராடாமஸ்
அந்த வகையில் பிரேசிலை சேர்ந்த 39 நபரான ‘ஆத்தோஸ் சலோமே’ என்பவர் வாழும் நோஸ்ட்ராடாமஸாக அறியப்படுகிறார். இதற்கு முன்னர் 10 விஷயங்களை கணித்திருந்ததாகவும், அதில் 2 நடந்திருக்கிறது என்றும் கூறுகிறார். இவர் கணித்ததாக கூறப்படும் 10 விஷயங்களில் ஈரான் போர் மற்றம் உலக கோப்பை வெற்றி ஆகிய இருந்தன.
ஈரானின் அணுசக்தி திட்டம் காரணமாக, 2026ம் ஆண்டின் பாதியில் மத்திய கிழக்கில் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டும் என்று அவர் கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது.
கால்பந்து போட்டி
அதேபோல கால்பந்து உலக கோப்பை போட்டி குறித்து அவர், “நெருப்புடன் தொடர்புடைய நிறங்களை ஜெர்ஸியாக அணிந்த அணிதான் வெற்றிப்பெறும்” என்று கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே பிரான்ஸ் அணி ஜெயித்திருந்தது.
எனவே மற்ற 8 கணிப்புகளும் சீக்கிரமே நடக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். ஆர்டிக் பகுதியில் விரைவில் போர் வெடிக்கும் என்பது இவரது மற்றொரு பிரபலமான கணிப்பு. ரஷ்யா தனது ஏவுகணை அமைப்புகளை ஆர்டிக் பகுதியில் நிலை நிறுத்தி வருகிறது. அங்கு அபாரமான எண்ணெய் வளம் இருக்கிறது. கப்பல் போக்குவரத்துக்கும் இந்த பகுதி சிறந்தது என்பதால், ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு வருகின்றன. இந்த போட்டி விரைவில் ரஷ்யா- நேட்டோ மோதலாக வெடிக்கும் என்று அச்சம் எழுந்திருக்கிறது.
உண்மையில் நடக்குமா?
சரி இவர் சொன்னது உண்மையில் நடந்திருக்கிறதா? என்று கேட்டால்.. பெரும்பாலும் நடந்திருக்கிறது என்றே பலரும் கூறுகின்றனர். கோவிட்-19 தொற்று, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மரணம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவை இவர் கணித்தபடியே நடந்திருப்பதாக இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நீல நிறத்தில் ஜெர்ஸி
எல்லாம் ஓகேதான், ஆனால் உலக கோப்பை காலபந்து போட்டி பற்றி இவர் சொன்னது எங்கேயோ இடிக்குதே! என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நெருப்புடன் தொடர்புடைய நிறத்தை ஜெர்ஸியாக அணிந்த அணிதான் ஜெயிக்கும் என இவர் கூறியிருந்தார். அப்படி எனில், சிவப்பு, மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்த அணிதான் ஜெயித்திருக்க வேண்டும். நெருப்புக்கும் நீல நிறத்திற்கும் சம்பந்தமே இல்லையே.. கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி வீரர்கள் நீல நிறத்தில் ஜெர்ஸியை அணிந்திருந்தனர். அப்புறம் எப்படி இவரது கணிப்பு சரியாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
பொதுவாக கணிப்பு சொல்பவர்கள் எல்லாம்.. குத்து மதிப்பாகத்தான் அடித்து விடுவார்கள். இந்த நேர்த்தில், இந்த நபர், இந்த நாள் என மிகச்சரியாக சொல்ல மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் ஆத்தோஸ் சலோமே-ஐ கலாய்த்து வருகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!




