( ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுப் யூசோப், வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ” BN Plus ” என்ற அடிப்படையில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மலாக்கா பாதிசான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மலாக்கா அம்னோ மாநிலத் தலைவருமான அவர், பேச்சுவார்த்தைக்கு வரும் அனைவரையும் வரவேற்பதாகவும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது மட்டுமே இறுதி ஒப்பந்தம் அல்லது கூட்டணி உருவாகும் என்பதைக் குறிக்காது என்றார்.
“யார் வேண்டுமானாலும் வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், பேச்சுவார்த்தை நடந்தால் அதுவே உடன்பாடு அல்லது கூட்டணியாக மாறிவிடும் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு தரப்பின் பலம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். தற்போது எந்த இறுதி கூட்டணியிலும் நாம் கட்டுப்படவில்லை. அனைவருடனும் பேசத் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
இக்கருத்தை அவர் இன்று மலாக்காவில் உள்ள தெலோக் மாஸ் சட்டமன்றத் தொகுதி ஜெப்ருன் வளாகத்தில் நடைபெற்ற முதல்வரின் மிஸ்ரா – சாயாங் ராக்யாட் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று பாரிசான் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, நெகிரி செம்பிலானில் BN–PN கூட்டணி அரசு அமைத்த வெற்றி, வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலிலும் வெற்றியைத் தொடரும் ஊக்கமாக அமையும் என்று கூறியிருந்தார்.
அதேவேளை, நெகிரி செம்பிலானின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஜுவாசே சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் லாசிம் அவர்களுக்கும் அப்துல் ரவூப் வாழ்த்து தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.



