16ஆவது பொதுத் தேர்தல் வரை தங்களது அரசியல் ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்து பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இன்னும் விவாதிக்கவில்லை என அம்னோ துணைத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தை வலுப்படுத்துவதே உடனடி முன்னுரிமை என வான் ரோஸ்டி கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நாங்கள் அது குறித்து இன்னும் விவாதிக்கவில்லை. இப்போதைக்கு, நாங்கள் முதலில் நெகிரி செம்பிலானில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம். அதன் பிறகு, மற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிப்போம். ஒருவேளை அதற்குப் பிறகு, மலாக்காவில் ஏற்படும் முன்னேற்றங்களை நாங்கள் கவனிப்போம் என்று இன்று தெமர்லோவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
நெகிரி செம்பிலானில் BN-PN ஒத்துழைப்பு அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும் என்று PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் முன்னதாகக் கூறியிருந்தார். இது, இந்த ஏற்பாடு மலாக்கா தேர்தல் மற்றும் இறுதியில் GE16 வரை நீட்டிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது. PN உடனான ஒப்பந்தம் மலாக்காவிற்கும் நீட்டிக்கப்படும் என்று BN தலைவரும், அம்னோ தலைவருமான அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
நேற்று, நெகிரி செம்பிலான் தேர்தலில் போட்டியிட்ட 36 இடங்களில் BN மற்றும் PN 25 இடங்களை வென்றன. இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசாங்கத்தை அமைக்கத் தேவையான இடங்களைப் பெற்றன.
BN 18 இடங்களுடன் மிகப்பெரிய அணியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் PN ஏழு இடங்களை வென்றது. மீதமுள்ள 11 இடங்களை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றியது. நேற்று இரவு, நெகிரி செம்பிலான் தேர்தலில் PH தோல்விக்கு, அதன் அடையாள அரசியலை சுரண்டியதே காரணம் என்று பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குனர் அமிருதின் ஷாரி குற்றம் சாட்டினார்.
BN இனவாதப் பிரச்சாரத்தைக் கையாண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வான் ரோஸ்டி நிராகரித்தார். வேட்பாளர்களின் நம்பகத்தன்மை மற்றும் ஒரு நிலையான அரசாங்கத்திற்கான வாக்குறுதியின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் தங்கள் முடிவுகளை எடுத்தனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர் கூறினார்.
நாங்கள் இனவாத அஸ்திரத்தைப் பயன்படுத்தியிருந்தால், பெரும்பான்மையான வாக்காளர்கள் மலாய்க்காரர்களாக உள்ள ஒரு தொகுதியில் MCA வேட்பாளர் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும்? மலாய் வாக்காளர்கள் இன்னமும் MCA வேட்பாளரையே ஆதரித்தனர் என்று அவர் கூறினார்.



