நேற்று நடைபெற்ற 16-ஆவது மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் – பெரிகாத்தன் நேஷனல் கூட்டணி பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 12-ஆவது மந்திரி பெசாராக அம்னோவின் இஸ்மாயில் லாசிம் இன்று பதவியேற்றார்.
ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ள அவர், இன்று இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் முன்னிலையில் தமது பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில், பதவிக்காலம் நிறைவடைந்த மாநில சட்டமன்ற சபாநாயகர் எம்.கே. இப்ராஹிம் அப்துல் ரஹ்மான், பாரிசான் துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இதர பாரிசான் நேஷனல் – பெரிகாத்தன் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2018-ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மாநிலத்தை வழிநடத்திய பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அமினுதீன் ஹருனிடமிருந்து இஸ்மாயில் இப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
63 வயதான அவர், நேற்று நடைபெற்ற தேர்தலில் 4,091 வாக்குகள் பெரும்பான்மையில் ஜுவாசே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து ஏழாவது முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் 1999 முதல் 2018 வரை செனாலிங் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். அதன் பிறகு ஒரு முறை ஜுவாசே தொகுதிக்கு மாறினார், பின்னர் 2023 மாநிலத் தேர்தலில் மீண்டும் செனாலிங் தொகுதிக்குத் திரும்பினார்.
முகமட்டின் நிர்வாகத்தின் கீழ் 2008 முதல் 2018 வரை பல்வேறு துறைகளில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றிய இஸ்மாயில், மாநில அரசாங்கத்தில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2023 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அவர் மீண்டும் மாநில அரசாங்கத்திற்குத் திரும்பினார், அமினுதீனின் நிர்வாகத்தில் கல்வி மற்றும் மனித மூலதன மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் பாரிசான் 18 இடங்களையும், பெரிகாத்தன் ஏழு இடங்களையும் வென்றன. இதன் மூலம் இவ்விரு கூட்டணிகளும் மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளன. மீதமுள்ள 11 இடங்களை பக்காத்தான் கைப்பற்றியது.
-fmt
