Last Updated:
இவ்விழாவில் பாரம்பரிய அரிசி ரகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
விழுப்புரத்தில் நடைபெற்ற பாரம்பரிய நாட்டு ரக அரிசி மற்றும் விதை திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விதைகள் மற்றும் அரிசி ரகங்களை வாங்கிச் சென்றனர்.
பசுமை இயற்கை விவசாய இயக்கம் (தமிழ்நாடு & புதுச்சேரி) சார்பில், அமைப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு பொன்விழாவை முன்னிட்டு, பாரம்பரிய விதை திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா விழுப்புரம் பாண்டி சாலையில் உள்ள ஜெய்சக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில், நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை விவசாய விதைகள், பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் நாட்டு விதைகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தக்கார், மூங்கில் அரிசி, குழியடிச்சான், கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய அரிசி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், அவரை, பாகற்காய், மிதி பாகற்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, யாழ்ப்பாண முருங்கை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய காய்கறி விதைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
அதுமட்டுமின்றி, பாரம்பரிய அரிசி ரகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இயற்கை உணவு முறைகள் மற்றும் பாரம்பரிய விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த திருவிழாவிற்கு விழுப்புரம் மட்டுமின்றி சென்னை, சேலம், விருதாச்சலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பாரம்பரிய விதைகள் மற்றும் அரிசி ரகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Viluppuram,Tamil Nadu
