ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றையதினம் ஜூலை 31ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஹேமசிறி பெர்னாண்டோ இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் மட்டுமே கைது செய்யுங்கள்” என உத்தரவிட்டதாகவும் ஹேமசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை
இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறுதல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர்.
2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 268 பேர் உயிரிழந்தனர், 586 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கியிருந்தார் என்பது நீதிமன்றில் நிரூபணமானது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹேமசிறி பெர்னாண்டோவின் இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

