Last Updated:
கடுமையான காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்கும் இந்நோய், மனிதர்களுக்கு அதிக ஆபத்தையும் மரணத்தையும் விளைவிக்கக்கூடியது
ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலாற்று உருமாற்றங்களில் மிகவும் வேகமாகவும் தீவிரமாகவும் பரவி வரும் எபோலா பரவலாக இது கருதப்படுகிறது.
காங்கோ அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை வரை மொத்தம் 3,442 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,521 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 50% வரை கணிசமாக அதிகரித்துள்ளது, தடுப்பு நடவடிக்கைகளை விட நோயின் வேகம் அதிகமாக இருப்பதையே காட்டுகிறது.
கடந்த மே 15 அன்று தொடங்கப்பட்ட இந்த எபோலா பரவலுக்கு ‘புண்டிக்புக்யோ’ (Bundibugyo) வகை வைரஸே முக்கியக் காரணமாகும். வழக்கமான எபோலா வைரஸ்களுக்குத் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட ‘Bundibugyo’ வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான சிகிச்சைகளோ இல்லை என்பது உலக சுகாதார அமைப்புகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
2014-2016 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா வைரஸே இதுவரை மிக மோசமானதாகக் கருதப்பட்டது. அப்போது 1,000 உயிரிழப்புகளை எட்ட சுமார் 8 மாதங்கள் ஆகிய நிலையில், தற்போதைய பரவலில் மிகக் குறுகிய காலத்திலேயே 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எபோலா அரிதாகப் பரவக்கூடிய நோய் என்றாலும், பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், வாந்தி அல்லது உடலின் பிற திரவங்கள் வழியாக மிக வேகமாக மற்றவர்களுக்குப் பரவக்கூடியது. கடுமையான காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்கும் இந்நோய், மனிதர்களுக்கு அதிக ஆபத்தையும் மரணத்தையும் விளைவிக்கக்கூடிய மிக தீவிரமான பாதிப்பாகும் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தடுப்பூசி இல்லாத புதிய வகை எபோலா காய்ச்சல்: காங்கோவில் மிக வேக பரவலால் பொதுமக்கள் அச்சம்

