கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து உக்ரைனுக்கு எதிராக செயல்படுவதாகவும் டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார்.
இந்நிலையில் மறைந்த குடியரசுக்கட்சி செனட்டர் லிண்ட்சே கிரகாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் மசோதா செனட் சபையில் செவ்வாய் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தரப்பு செனட்டர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு இது முழு அதிகாரம் வழங்கப்படும்.
மசோதா மீது செனட் சபையில் விவாதம் நடைபெறும். பின்னர் உறுப்பினர்கள் தங்களது எழுத்துப்பூர்வ திருத்தங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விவாதங்கள் முடிந்த பிறகு, செனட் சபையில் இந்த மசோதா மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். செனட்டில் இதற்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், எளிதாக நிறைவேறிவிடும்.
செனட்டில் நிறைவேற்றப்பட்டாலும், இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்குச் செல்ல வேண்டும்.
பிரதிநிதிகள் சபை தற்போது ஆகஸ்ட் மாத கோடைக்கால விடுமுறையில் உள்ளதால், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே சபை மீண்டும் கூடி இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும். அங்கேயும் இந்த மசோதாவிற்கு இரு கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்க வேண்டும்.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய பிறகு, அது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிபர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாக மாறும். அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்த மசோதாவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும்.
இந்தியா தனது உள்நாட்டுத் தேவைகளுக்காக ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்த 100% வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியா-அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
