Last Updated:
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் 13 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதனை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, பேராசிரியர்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய நெட்வொர்க்கைச் சேர்ந்த 13 முக்கிய நபர்களை சிபிஐ கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த நிலையில், 13 பேருக்கும் எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், பொதுத் தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப்பத்திரிகை குறித்து, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளது.


