கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த 48 வயதான குமார், பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஓசூர் வழியாகச் செல்லும் இவர், கடந்த 22 ஆண்டுகளாக மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை தினமும் குடித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இருமுடி கட்டி சபரிமலை செல்லும் இவர், நேற்று மாலை ஓசூருக்கு வருகை தந்தார். அப்போது ஓசூர் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்த அவர், தொடர்ந்து தனது பாக்கெட்டிலிருந்த இன்ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் வேகமாகக் குடித்துள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து குமார் கூறுகையில், “நான் தினமும் லிட்டர் கணக்கில் பழைய இன்ஜின் ஆயிலைக் குடிக்கிறேன். இதனால் அனைவரும் என்னை ‘ஆயில் குமார்’ என்றே அழைக்கின்றனர்.
மெக்கானிக் கடைகளுக்குச் சென்று பழைய இன்ஜின் ஆயிலை விலைக்கு வாங்கிக் கொள்வேன். எப்போதாவது ஒருமுறை மட்டுமே டீ குடிப்பேன். மற்ற உணவுகளைச் சாப்பிட்டால் எனது உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்பதால், சாதாரண உணவுகளைத் தவிர்த்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

