Last Updated:
தற்போது மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கு விற்பனையாகி வருகிறது.
மணம் மற்றும் தரத்திற்காக உலகப் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப்பூவின் விலை, பூக்களின் வரத்து குறைந்ததாலும், ஆடி வெள்ளி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தேவை அதிகரித்ததாலும் மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கு விற்பனையாகி வருகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு விற்பனையாகும் மதுரை மல்லிகைப்பூ உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் மல்லிகைப்பூவின் தேவை குறைந்து, விலையும் சரிவில் இருந்தது. மேலும், பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால், ஆடி மாதம் தொடங்கிய பின்னரும் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-ஐ தாண்டாமல் விற்பனையாகி வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெயிலால் மல்லிகைப்பூவின் வரத்து குறைந்துள்ளது. அதேநேரத்தில் பிரதோஷம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்கள் மற்றும் வீடுகளில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.700-க்கு விற்பனையாகி வருகிறது.
மற்ற பூக்களின் விலையைப் பொறுத்தவரை, பிச்சி, கனகாம்பரம் மற்றும் முல்லை ஆகியவை ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், அரளி ரூ.100 முதல் ரூ.120 வரையிலும், செவ்வந்தி மற்றும் பன்னீர் ரோஜா ரூ.200 முதல் ரூ.220 வரையிலும் விற்பனையாகின்றன. மேலும், தாமரை ஒரு பூ ரூ.5 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதுள்ள வெயிலின் தாக்கம் தொடர்ந்தால் பூக்களின் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் முகூர்த்த நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் பூக்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், மல்லிகைப்பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Madurai,Madurai,Tamil Nadu

