Last Updated:
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி இளைஞர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடாவிட்டால் மீண்டும் போராட்டத்தை கையில் எடுப்போம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்துவருகிறது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.
இந்நிலையில், நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து டெல்லி போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாக சிஜேபி நிர்வாகிகள் அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வீடு திரும்புமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் போராட்டத்தை கைவிட்ட சூழலில், கைது செய்த போராட்டக்காரர்களை டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் காவல்துறை விடுவிக்கவில்லை அந்த அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.


