(கோகி கருணாநிதி)
நீலாய்:
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நிலாய் சட்டமன்றத் தொகுதியில் (N10) போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெ. அருள் குமாருக்கு ஆதரவு கோரி நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தமது உரையில், அருள் குமார் புதிய முகம் அல்ல என்றும், பல ஆண்டுகளாக நிலாய் மக்களுக்கு சேவையாற்றி வரும் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதி என்றும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் மக்களின் பெரும் வருகை, அருள் குமாருக்கு கிடைத்துள்ள வலுவான மக்கள் ஆதரவின் வெளிப்பாடாகும் என்றார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வர வேண்டும் என்றும், ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். வலுவான மக்கள் ஆணையுடன் அருள் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் தற்போது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மாநிலமாக உருவெடுத்து வருவதாகக் கூறிய அவர், உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் மாநிலத்திற்கு இருப்பதாக தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை வளர்ச்சி, புதிய முதலீடுகள் ஆகியவை மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்றார்.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் என்பது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான வாய்ப்பாகும் என்றும், மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கமே கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் நிலையான ஒத்துழைப்பு இருக்கும் போது மட்டுமே மக்களுக்கு அதிகளவில் வளர்ச்சி திட்டங்களையும் நலத்திட்டங்களையும் கொண்டு வர முடியும் என்றும், மக்கள் வழங்கும் வலுவான ஆணை மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவசியம் என்றும் கோபிந்த் சிங் டியோ தனது உரையில் வலியுறுத்தினார்.
The post நீலாய் தொகுதியில் அருள் குமாருக்கு ஆதரவு திரட்டிய கோபிந்த் சிங் டியோ appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

