இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் அவற்றை விடுவிக்கத் தவறியதால், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இறக்குமதியாளர்களால் நீண்டகாலமாக பொறுப்பேற்கப்படாமல் உள்ள சுமார் 1,025 வாகனங்களை ஏலம் விடுவதற்கு அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்வதற்கு, இலங்கை சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
துறைமுகத்தில் உள்ள வாகனங்களில் சுமார் 625 வாகனங்கள் வந்து 06 மாதங்களுக்கும் மேலாகின்றன என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், இறக்குமதியாளர்கள் அவற்றை விடுவிக்கத் தவறியதால், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129ஆவது பிரிவின் கீழ் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் வரி செலுத்தப்பட்ட ஒரு மாதத்துக்குள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக அந்தப் பொருட்களை விற்பனை செய்ய சுங்கத் திணைக்களத்துக்கு அதிகாரம் உண்டு.
வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் முதலில் அரச வரிகளை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும். அதன் பின்னர் எஞ்சிய தொகை துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களுக்காக ஒதுக்கப்படும். அதன்பின்னரும் மேலதிகமாக நிதி இருந்தால், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும்.
இருப்பினும், ஒரு வாகனத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான சரியான காரணத்தை இறக்குமதியாளர் முன்வைத்தால், அது குறித்து தனிப்பட்ட ரீதியில் பரிசீலிக்கப்படும் என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

