Last Updated:
தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி போராட்டத்தை வாபஸ் பெற்றது. மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் போராட்டம் இன்னும் வலுவடைந்துவருகிறது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.
இந்நிலையில், நாட்டின் சூழலை கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறியுள்ள தர்மேந்திர பிரதான், மோசடி கும்பல்களின் சதியால் மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதில் தான் மிகுந்த உறுதியுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த சில நாட்களாக முக்கிய பொறுப்பில் உள்ள சிலரே மாணவர்களை தவறான திசையில் வழிநடத்தியது பெரும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகள் தனக்கு மிகுந்த வருத்தம் அளித்ததாகவும், தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த அவமானமும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தர்மேந்திர பிரதான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து டெல்லி போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவதாக சிஜேபி நிர்வாகிகள் அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வீடு திரும்புமாறும் கேட்டுக் கொண்டனர்.


