நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த கனேடிய பெண் ஒருவர், உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்ஜிய கூட்டாட்சி அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெண், மூன்றாவது ஒரு நாட்டிற்காக உளவு தகவல்களை சேகரித்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.
மேலும், அவர் குற்றவியல் அமைப்பொன்றின் உறுப்பினராகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட பயிற்சியாளர், பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மோன்ஸ் நகரில் உள்ள நேட்டோவின்ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமையகத்தில் (Supreme Headquarters Allied Powers Europe – SHAPE) பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் கருத்து கோரப்பட்டபோதும், உடனடியாக எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.
அதேவேளை, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் பேச்சாளர், “இந்த விவகாரம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

