அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட ‘குருதேவ சுவ அரண’ பிக்குகளுக்கான நிலையத்தை நேற்று முன்தினம் திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
கொஹுவளை விகாரையின் விகாராதிபதியாகவும், இலங்கை ரமண்ய நிக்காயாவின் தலைமைப் பதிவாளராவும் இருந்த, மறைந்த வண. மாபாலகம சிறி சோமிஸ்ஸர நாயக்க தேரரின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை மற்றும் வெளிநாட்டு பிக்குகளுக்காக இந்த ‘குருதேவ சுவ அரண’ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாடிக் கட்டடம் கொண்ட இந்த நிலையத்தில், 3 மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது பிக்குகள் சிகிச்சை பெறலாம். அலுவலக அறைகள், வார்டு, அம்யூலன்ஸ், மருந்தகம், மருத்துவர்களுக்கான தங்குமிடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அந்தப் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கும் உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான நிறைவேற்றுத் துறை, சபாநாயகர் தலைமையிலான சட்டவாக்கத் துறை, பிரதம நீதியரசர் தலைமையிலான நீதித்துறை உள்ளிட்ட 3 துறைகளும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியமாகும் என்றார். (a)



