கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன்(வயது31) மற்றும் எம். லூசிநாத் (வயது30) என அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கைது
அந்த இருவரையும், சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரகாவல்துறையினர், வெள்ளிக்கிழமை(234) தனுஷ்கோடி கடற்கரையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதையடுத்து கைது செய்தனர்.

விசாரணைக்காக இருவரும் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன.
மேலும் விசாரணை செய்தபோது,கடந்த வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவை
மேலும், அந்த இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களைக் காவலில் வைக்குமாறு இலங்கை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

