Last Updated:
நான்கு பேரரசர்களின் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குரோஷிய கடலடியில் கிடைத்த தங்கப் புதையல் மூலம், பல ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த கப்பல் விபத்து ஒன்றின் விவரங்கள் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது.
குரோஷியாவின் Mljet தீவு அருகே தெற்கு அட்ரியாட்டிக் கடல் பகுதியில் மூழ்கிய கப்பலில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இதில், ரோமானிய-பைசான்டைன் காலத்தைச் சேர்ந்த அரிய வகை தங்க நகைகள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கப்பல் புதையல்களிலேயே இதுவே மிகப்பெரியது என தொல்லியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கத்தின் எடை 600 கிராமுக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளாகும். குறிப்பாக, பைசான்டைன் பேரரசரின் உருவம் பொறித்த தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணிக்கம், மரகதம், முத்துக்கள் பதித்த தங்கப் பூட்டுகள், செடியிலிருந்து திராட்சையை ஒரு பறவை உண்பது போன்ற வேலைப்பாடு கொண்ட நகைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், நான்கு பேரரசர்களின் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இக்கப்பல் கி.பி. 685-ஆம் ஆண்டிற்குப் பிறகே மூழ்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்லும் போது இந்த கப்பல் மூழ்கி இருக்கலாம் என்றும் தொல்லியல் துறைத் தலைவர் பாவ்லே டுகோன்ஜிக்(Pavle Dugonjic) கூறியுள்ளார்.
கடலுக்கு அடியில் கிடைத்த தங்க புதையல்… தொல்லியல் வல்லுநர்கள் கூறிய ஷாக் தகவல்கள்.. எங்கு தெரியுமா?


