ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகப் பாரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான் இன்னும் போதிய வலியை உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய தாக்குதல்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மிகப் பாரிய அளவிலான தாக்குதல் குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்.
இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலாக அது இருக்கும்.

முடிவெடுக்கும் நிலைக்கு நான் மிக அருகில் உள்ளேன்.
இதற்கான அனைத்து ஆயத்தங்களும் எங்களிடம் தயாராக உள்ளன” என தெரிவித்துள்ளார்.
கடுமையான விளைவுகள்
அத்தோடு இத்தகைய முடிவினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், இருப்பினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது காலக்கெடுவோ நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் இந்தத் தாக்குதலில் இணைந்து கொள்ளும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இஸ்ரேல் இத்தாக்குதலில் இணைந்தால் அதற்கு ஈரானின் பதிலடி போன்ற விளைவுகள் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஆனால் தற்போதைக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

