Last Updated:
இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2,510 கோடி பரிவர்த்தனை குறித்து FBI அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
2026 ஃபீஃபா உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஸ்பான்சர்ஷிப் நிதியில் பல நூறு மில்லியன் டாலர் அளவில் பணமோசடி (Money Laundering) நடைபெற்றதாகக் கூறி, அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க வங்கிகள் மற்றும் புளோரிடாவைச் சேர்ந்த ‘TourProdEnter LLC’ என்ற நிறுவனம் மூலமாக AFA-வின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் தொடர்பாக பரிமாற்றம் செய்யப்பட்ட 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2,510 கோடி பரிவர்த்தனை குறித்து FBI அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் குறைந்தபட்சம் 260 மில்லியன் டாலர் சுமார் ரூ. 2,175 கோடி ஐந்து முக்கிய அமெரிக்க வங்கிகள் வழியே சென்றுள்ளதாகவும், தெளிவான காரணம் இல்லாத மேலும் 57 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 477 கோடி) பரிவர்த்தனை குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அர்ஜென்டினா அணி அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப பிரத்யேக விமானத்தில் ஏறவிருந்த போது, AFA தலைவர் கிளாடியோ ‘சிகி’ டாபியா (Claudio ‘Chiqui’ Tapia) மற்றும் பொருளாளர் பாப்லோ டோவிகினோ ஆகியோர் அமெரிக்க அதிகாரிகளால் பஸ்ஸில் வைத்து சுமார் 30 நிமிடங்கள் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கள் தலைவர் டாபியா கைது செய்யப்பட்டார் அல்லது அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது என்ற செய்திகளை AFA நிர்வாகம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது. இருப்பினும், AFA அதிகாரிகளுடன் தொடர்புடைய ஒரு ‘மூன்றாம் நபருக்கு’ (Third-party) அமெரிக்க கிராண்ட் ஜூரி நீதிமன்றம் மூலம் ஆஜராகி ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதை AFA ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


