
வங்கியாளர் ஒருவர் மீது பொய் பாலியல் பலாத்காரப் புகார் அளித்து, அவரிடமிருந்து £100,000 பணத்தை அபகரிக்க முயன்ற பிரித்தானியப் பெண் ஹொங்கொங்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனின் ஹாக்னியைச் சேர்ந்த இசபெல் ரோஸ் (26) என்ற பெண், பிளாக்மெயில் செய்தல் மற்றும் நீதித்துறையைத் திசைதிருப்ப முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது தனது தாயை நோக்கி முத்தங்களை வீசி கையசைத்துச் சென்ற அவர், நீதிபதி அட்ரியானா நோயல் த்சே சிங் அவர்களால் “தனது கொடூரமான செயலுக்குத் துளிக்கூட வருத்தம் தெரிவிக்காதவர்” என்று வர்ணிக்கப்பட்டார்.
மார்ச் மாதம் நடைபெற்ற ஆறு நாள் விசாரணையின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தாய்லாந்தில் பயணம் செய்தபோது ‘X’ என்று குறிப்பிடப்படும் வங்கியாளரைச் சந்தித்த ரோஸ், 2024 ஆம் ஆண்டில் அவரைச் சந்திப்பதற்காக ஹொங்கொங்கிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிப்ரவரி 1 ஆம் திகதியிரவு இருவரும் ஒன்றாக நேரத்தைச் செலவிட்ட நிலையில், அதன் பின்னர் ரோஸ் தன்னைப்பலாத்காரம் செய்ததாகப் பொய்ப் புகார் அளித்தார்.
ஆரம்பத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அவர் எந்தக் குற்றச்சாட்டுமின்றி விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில், அன்றிரவு இருவரும் “சுயவிருப்பத்தின் பேரில் நெருக்கமான செயல்களில் ஈடுபட்டது” கண்டறியப்பட்டது. மேலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் உடலுறவு நடந்ததா இல்லையா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
சம்பவத்திற்குப் பிறகு சில நாட்களில் அந்த நபரிடம் £5,000 கேட்ட ரோஸ், அதனைத் தொடர்ந்து காவல்துறையினரிடம் செல்வதாக மிரட்டி £100,000 தருமாறு கோரியுள்ளார். விசாரணையின் போது, ரோஸுக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்பதைக் சுட்டிக்காட்டி அவரது தரப்பு வழக்கறிஞர் கருணை கோரினார். எனினும், அவர் பணம் கேட்டு மிரட்டியது “தெளிவாக உறுதியாகியுள்ளது” என்று கூறிய நீதிபதி சிங் அந்த வாதத்தை நிராகரித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட நபரை “நாணயமான மற்றும் நம்பகமான சாட்சி” என்றும், பிரித்தானியப் பெண்ணை “நாணயமற்ற மற்றும் நம்பகமற்றவர்” என்றும் நீதிபதி வர்ணித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹொங்கொங்கில் தடுத்து வைக்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் சிரமப்பட்ட ரோஸுக்கு, பிளாக்மெயில் குற்றத்திற்காக 5 ஆண்டுகளும், நீதித்துறையைத் திசைதிருப்ப முயன்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகளும் ஆரம்பச் சிறைத் தண்டனையாக விதிக்கப்பட்டது. இதில் ஓராண்டு காலத் தண்டனை தொடர்ச்சியாக அனுபவிக்கப்பட வேண்டும் என்பதால், மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து, ரோஸ் ஹொங்கொங்கின் பழமையான அதிகபட்ச பாதுகாப்புடைய பெண்களுக்கான சிறைச்சாலையான தாய் லாம் சீர்திருத்த நிறுவனத்திற்கு (Tai Lam Correctional Institution) அனுப்பி வைக்கப்பட்டார்.


