Last Updated:
மைசூரில் தொழிலதிபர் ஹரிஷ், மனைவி, இரு மகள்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார். கடன் நெருக்கடியே காரணம் என கடிதத்தில் தகவல். போலீசார் விசாரணை.
கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள அன்சூர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான ஹரிஷ். இவருக்கு நிஷ்சிதா என்பவருடன் திருமணமாக 13 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஹரிஷ், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிஷ் உடன் தங்கியிருந்த அவரின் தாயார் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஹரிஷ் மற்றும் அவரின் மனைவியை உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, ஹரிஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதுடன் தடயங்களை சேகரித்தனர். அப்போது, கட்டியில் தூக்க நிலையிலேயே நிஷ்சிதா மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர்.
அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, ஹரிஷ் விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஹரிஷ் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம்.. போலீசில் சிக்கிய கணவன் எழுதிய கடிதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!


