Last Updated:
வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட ஒரு போருக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை மீண்டும் கேட்பது நியாயமற்றது
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் அமெரிக்காவிற்கு இதுவரை சுமார் 37.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.23 லட்சம் கோடி) வரை செலவை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பிட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் கணக்கிடப்பட்ட தொகையை விட இது சுமார் ரூ. 68,000 கோடி (8 பில்லியன் டாலர்) அதிகம் ஆகும். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றச் செனட் குழுவின் முன் ஆஜரான ஹெக்செத், இராணுவப் பயன்பாட்டிற்காக மேலும் 87 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7.48 லட்சம் கோடி) அவசர நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் ரூ. 5.76 லட்சம் கோடி (67 பில்லியன் டாலர்) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நேரடி இராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்கப் படைகளின் ஆயுதப் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், வீரர்களின் ஊதியம் மற்றும் பயிற்சிகளைத் தடையின்றித் தொடர்வதற்கும் இந்த கூடுதல் நிதி அவசியம் என்று பென்டகன் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் நிதிக் குழுவின் விசாரணைக்கூட்டத்தில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் நடந்தன. ஹெக்செத் உரையாற்றத் தொடங்கியபோது, கூட்டரங்கில் திரண்ட போர் எதிர்ப்புப் போட்டியாளர்கள் அவரது உரையை பலமுறை இடைமறித்துப் போராட்டம் நடத்தினர்.
ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் இந்த நிதி கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். அமெரிக்க மக்கள் சொந்த வாழ்க்கைப் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், “வெற்றிகரமாக முடிந்துவிட்டது” என்று கூறப்பட்ட ஒரு போருக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை மீண்டும் கேட்பது நியாயமற்றது என எம்பி கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் குற்றம் சாட்டினார்.
ஜனநாயகக் கட்சி எம்பி கேரி பேட்டர்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத்தை “தோல்வியடைந்தவர்” என்றும், அமெரிக்காவை மீண்டும் ஒரு “முடிவில்லா போருக்குள்” (Forever war) தள்ளிவிட்டதாகவும் சாடினார்.
தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க இராணுவத் தளங்களின் சீரமைப்பு மற்றும் கட்டுமானச் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால், உண்மையான போர்ச் செலவு இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போரால் அமெரிக்கா இழந்தது இத்தனை லட்சம் கோடியா? நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை..


