Last Updated:
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு உட்பட 5 புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் சட்ட மசோதா உட்பட 5 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலை வேண்டுமென்றே அவமதிப்பவர்களுக்கும், அதை பாடுவதற்குத் தடை ஏற்படுத்துபவர்களுக்கும் தண்டனை வழங்கும் தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மசோதா, இந்த தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு குழந்தை பிறந்து அல்லது ஒருவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக செய்யப்படும் பதிவுகளுக்கு முதல் வகுப்பு நீதித்தறை நடுவர் உத்தரவு தேவை என்ற சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக உயர்த்தும் திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர்த்து நிலுவையில் உள்ள அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, உயர்கல்வித் துறையை சீரமைப்பதற்கான விக்சித் பாரத் கல்வி நிறுவன மசோதா ஆகியவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
அதே சமயம், பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் உட்பட உயர் பதவியில் உள்ளவர்கள் 30 நாட்கள் சிறைத்தண்டனை பெற்றால் பதவியிலிருந்து தானாகவே நீக்கும் அரசியலமைப்பின் 130ஆவது சட்டத்திருத்தம், மகளிருக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் 131ஆவது சட்டத் திருத்தத்துக்கான மசோதாக்கள் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.


