50 டெண்டர்கள் ரத்து.. விஜய் உத்தரவால் ஆடிப்போன நகராட்சி நிர்வாகத் துறை..!
தவெக தலைமையிலான அரசு ஆட்சி அமைந்த நாளில் இருந்து டெண்டர்கள் தொடர்பான பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட டெண்டர்கள், குறைந்த காலக்கட்டத்தில் ஒதுக்கப்பட்ட டெண்டர்கள் என பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதன் நீட்சியாக முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாக துறையில் இன்று 50க்கும் அதிகமான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட முக்கியமான காரணம் டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தான் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக பல டெண்டர்கள் வெளியிடப்பட்டு 1-4 நாட்களுக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு முடிக்கப்பட்டு டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக அரசு திட்டங்களுக்கான டெண்டர்களுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்படால் மட்டுமே அனைத்து தரப்பிரனும் விண்ணப்பித்து சரியான போட்டித்தன்மை உடன் வெளிப்படையாக டெண்டர்கள் ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் 1-4 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் காலம் முடிந்த காரணத்தால் பல தரப்பில் இருந்து புகார் வந்தது, இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நகராட்சி வாரியாக பார்க்கும் போது உடுமலைப்பேட்டையில் சுமார் 30 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து கோத்தகிரியில் 3 டெண்டர்கள், செங்கம் பகுதியில் 2 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளிலும் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ரத்து செய்யப்பட்ட டெண்டர்களில் பெரும்பாலான பணிகள் கழிவுநீர் வடிகால், குடிநீர் இணைப்பு, வாரச் சந்தை கடைகளுக்கான ஒப்பந்தம், புதிய போர்வெல் அமைப்பது, அரசு கட்டிடங்களை ஒப்பந்த அடிப்படையில் விடுவதற்கான டெண்டர்கள் இதில் அடக்கம்.
இதுநாள் வரையில் மற்ற துறைகளில் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதை எல்லோரும் பார்த்தோம், ஆனால் முதல் முறையாக முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 50க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரத்து செய்யப்பட்ட டெண்டர்களை மறு ஆய்வு செய்து, ஓன்றுடன் ஒன்று சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ மீண்டும் டெண்டர் கோர அறிவிப்பு வெளியாகும், இதற்கான கால அவகாசமும் முறைப்படி பின்பற்றப்படும்.
