Sports
oi-Vigneshkumar
வாஷிங்டன்: கால்பந்து உலகக் கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணி, மைதானத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் பக்காவாக திட்டம் போட்டே இந்த தொடரை அணுகியுள்ளது.. குறிப்பாக அமெரிக்கா செல்லும்போது தங்கள் கையோடு 500 கிலோ மாட்டுக்கறியையும் எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. ஞாயிறு இரவு நடைபெறும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன. அர்ஜென்டினாவெற்றிக்கு மெஸ்சியின் கலக்கலான ஆட்டம் முக்கிய பங்காற்றி வந்தாலும், வீரர்களை உடல்நிலை மற்றும் மனநிலையில் சரியாக வைத்திருக்க அணியின் நிர்வாகம் எடுத்துள்ள சில முடிவுகளும் கவனம் ஈர்த்துள்ளன.

500 கிலோ மாட்டிறைச்சி
குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடருக்காக… அர்ஜென்டினா அணி கையோடு சுமார் 500 கிலோ மாட்டிறைச்சியை நேரடியாக தங்கள் நாட்டில் இருந்து எடுத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு விளையாட்டு வீரராக இருந்தாலும் பீக் பெர்பார்மன்ஸை வெளிப்படுத்த உணவு ரொம்பவே முக்கியமானது. அதிலும் குறிப்பாக உலக கோப்பை போன்ற நீண்ட மற்றும் கடினமான தொடரில்.. வீரர்களின் உடல்நலம் மற்றும் மீட்பு திறனை பராமரிப்பதில் உணவுகளுக்கு ரொம்பவே முக்கிய பங்கு இருக்கிறது.
பல வகை இறைச்சி
இதன் காரணமாகவே அர்ஜென்டினா அணி, வீரர்கள் தாய்நாட்டில் சாப்பிடும் அதே சுவை மற்றும் தரத்திலான உணவுகளை அமெரிக்காவிலும் வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் அதே தரத்தில் உணவு கிடைக்காது என்பதால் கையோடு 500 கிலோ மாட்டிறைச்சியை எடுத்து சென்றுள்ளனர். லோமோ (Lomo), வாசியோ (Vacio உள்ளிட்ட அர்ஜென்டினாவின் பாரம்பரிய இறைச்சி வகைகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு உணவை எடுத்து செல்வது அவ்வளவு ஈஸி இல்லை. 1008 கேள்விகள் வரும். இந்த அமெரிக்காவின் கடுமையான சுகாதார மற்றும் சுங்க விதிமுறைகளை பூர்த்தி செய்தே அர்ஜென்டினா மாட்டுக்கறியை எடுத்து சென்றுள்ளது. இதற்கு பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.
என்ன காரணம்!
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வீரர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நாட்டிலிருந்து பல வாரங்கள் விலகி இருக்க வேண்டியிருக்கும். இதனால் மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க.. அவர்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என அணியின் நிர்வாகம் கருதுகிறது. இதற்காக போட்டிக்கு பிறகு பார்பிக்யூ விருந்து கூட அர்ஜென்டினா அணி நிர்வாகம் ஏற்பாடு செய்ததாம். இது அணிக்குள் நட்பு, ஒற்றுமை மற்றும் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
நார்வே
அர்ஜென்டினா மட்டுமல்ல, நார்வே அணியும் கிட்டத்தட்ட இதே ஸ்டைலை பின்பற்றி உள்ளனர். நார்வே அணி உலகக் கோப்பைக்காக அமெரிக்கா செல்லும்போது சுமார் 580 கிலோ உணவுப் பொருட்களை தங்களுடன் எடுத்து சென்றது. குறிப்பாக 300 கிலோ சால்மன் மீன்கள், 100 கிலோ ஹாலிபட் மீன், 80 கிலோ பாரம்பரிய பிருனோஸ்ட் சீஸ் மற்றும் 100 கிலோ ஜார்ல்ஸ்பெர்க் சீஸ் ஆகியவற்றை எடுத்து சென்றதாம்!
இது குறித்து நார்வே தலைமை சமையல்காரர் ஆரோன் எஸ்பெலாண்ட், “இதுபோன்ற போட்டிகளில் விளையாடும் போது வீரர்களுக்கு சீரான உணவு இறுக்க வேண்டும். புதிய உணவு எல்லாம் தரக்கூடாது. அவர்கள் பழகிய சுவை மற்றும் உணவுகள் முக்கியம்” என்றார்.
உலக கோப்பை என்பது களத்தில் நடக்கும் அந்த 90 நிமிடங்கள் பற்றியது மட்டுமல்ல. வீரர்களின் உடல்நிலை, மனநிலை, உணவுப் பழக்கம் என அனைத்துமே இதில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையே இது காட்டுகிறது.




