இந்தியாவில் தடை.. இனி இந்த பொருட்கள் எல்லாம் நாட்டுக்குள்ள வர கூடாது!!
உலகின் முக்கிய ஏற்றுமதி நாடாக மாறிக்கொண்டு இருக்கும் இந்தியா, தனது வர்த்தக கொள்கையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்று வெளியான முக்கியமான அறிவிப்பில் மத்திய அரசு இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023ல் முக்கிய திருத்தமாக கட்டாய அல்லது அடிமை பணி முறையில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தயாரித்த பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முழு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது மிகவும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக அமெரிக்கா துவங்கியுள்ள புதிய விசாரணைக்கு பின்பு, கொள்கை அளவில் இத்தகைய மாற்றம் வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு Forced Labor முறையில் தயாரிக்கும் பொருட்களின் இறக்குமதி செய்வதை தடுக்கும் கொள்கைகளை இந்தியா முறையாக அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தது, இதில் இந்தியா மட்டுமில்லை உலகளவில் சுமார் 60 நாடுகள் இதில் இருந்தது.

இதேபோல் அமெரிக்கா இதுக்குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை செய்து வரி விதிக்க உள்ளதாகவும் அறிவித்தது. இதை புதிய வரி விதிப்பை தவிர்க்க மத்திய அரசு கட்டாய பணியமர்த்தல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மொத்தமாக தடை செய்யும் வகையில் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மாற்றியுள்ளது.
ஜூலை 13 ஆம் தேதி கெஜெட் அறிவிப்பு மூலம் Foreign Trade Policy (FTP) 2023 கொள்கையில் வெளிநாட்டு வர்த்தக துறை புதிய பிரிவின் கீழ் இப்புதிய விதியை சேர்த்துள்ளது. இந்த விதி மூலம் உடனடியாக எந்தொரு நாட்டில் இருந்தோ அல்லது பொருளோ இறக்குமதி தடை செய்யப்படாது, ஆனால் அரசின் விதிகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும், அமெரிக்கா போல் பிற நாடுகள் தேவையில்லாமல் விசாரணை போன்ற விவகாரங்களில் ஈடுப்படாது. மேலும் இந்த விதி அடுத்த 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதிமாற்றம் அனைத்தும் ILO Forced Labour Convention, 1930 சட்டத்தின் 29வது விதிக்கு இணங்க செய்யப்பட்டு உள்ளது.
Forced Labor முறையில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்ற காரணத்திற்காக அமெரிக்க அரசு ஜூன் 3ஆம் தேதி சுமார் 54 நாடுகள் மீது 12.5 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கனடா, ஈக்வேடார், ஐரோப்பிய யூனியன், இந்தோனேஷியா, மெக்சிகோ, பாகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிக்கவும் உள்ளதாக அறிவித்தது.

