ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்..
புது விஷயங்களை கற்று கொள்ள வயது ஒரு தடையில்லை என கூறுவார்கள். அப்படி இங்கே ஒரு தாய் தனது 21 வயது மகனுடன் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை ஐஐடி மெட்ராஸில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அரிதான நிகழ்வாக தாயும், மகனும் ஒரே மேடையில் பட்டம் பெற்றுள்ளனர். 45 வயதான ஜிகிஷா டெய்லர் மற்றும் அவரது 21 வயது மகன் ஆதித்யா கபாடியா ஆகிய இருவரும், ஐஐடி மெட்ராஸில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் ஆன்லைன் படிப்பை முடித்து, பட்டம் பெற்றனர்.

குஜராத்தின் பருச் பகுதியை சேர்ந்தவர் ஜிகிஷா டெய்லர். இவர் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குடும்ப சூழல் காரணமாக 2019-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். ஆனால், கல்வியின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில் தான் அவரது மகன் ஆதித்யா 2021ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் ஐஐடி மெட்ராஸின் ஆன்லைன் பி.எஸ். (BS) டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கல்லூரிகள் ஆன்லைன் முறைக்கு மாறியிருந்ததால், ஆதித்யா வீட்டில் அமர்ந்து படிப்பதை கவனித்த ஜிகிஷா, தானும் டேட்டா சயின்ஸ் கற்று கொள்ளலாமே என ஆசை கொண்டாராம். மகன் ஆதித்யாவும் ஊக்கம் தந்ததால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஜிகிஷாவும் அதே பாடத்தில் சேர்ந்தார்.
தனது அன்றாட வீட்டு வேலைகளுக்கு இடையே ஜிகிஷா படிப்புக்கு என நேரம் ஒதுக்கி படித்தாராம். தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து காலை 7 மணி வரை படிப்பதையும், பின்னர் மதியம் வீட்டு வேலைகளை முடித்த பிறகு பாடங்களை படிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம்.
தாயும், மகனும் ஒரே பாடத்தை படித்ததால், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்துள்ளனர். தேர்வுகளில் யார் சிறந்த கிரேடு எடுப்பது என பெரிய போட்டியே நிகழுமாம். மகன் ஆதித்யா தேர்வுகளுக்கு எப்படி தயாராவது, நேர்காணலை எவ்வாறு எதிர்கொள்வது என தனது தாய்க்கு வழிகாட்டியுள்ளார்.
இந்நிலையில் இருவரும் பட்டமளிப்பு விழாவுக்கு சென்னை வந்துள்ளனர். அப்போது சக மாணவர்களுக்கு இவர்களின் விவரங்கள் தெரிய வந்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் பேசி இருவரும் மேடையில் ஒரே நேரத்தில் பட்டம் பெற ஏற்பாடு செய்தார்களாம்.
ஆதித்யா ஒரு நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் இன்டர்னாக சேர்ந்து, தற்போது முழுநேர பணியில் உள்ளார். ஜிகிஷாவும் கல்லூரிகளில் பேராசிரியர் வேலைக்காக செல்ல இருக்கிறாராம். உறவினர்கள், நண்பர்கள் இந்த வயதில் எதற்கு படிப்பு என கேட்டபோது, நான் வழக்கமான ஒரு தாயாக இருக்க விரும்பவில்லை என கூறுவாராம் ஜிகிஷா. அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

