Last Updated:
தெலங்கானாவில் 6 வயது பேத்திக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்த காவல் ஆய்வாளர் பூஜாரி திருப்பதய்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சாலை விதிகளை மீறியதால் நடவடிக்கை.
தெலங்கானாவில் 6 வயது பேத்திக்கு கார் ஓட்ட பயிற்சி அளிப்பதாக கூறி சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கந்தம்குடா பகுதியில் திடீரென taபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய வழித்தடத்தில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுந்து நின்றபோது ஒரு கார் மட்டும் ஊர்ந்து சென்றுள்ளது. திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஹாரன் அடித்துள்ளனர். வாகனங்களின் ஹாரன் சத்தம் செவித் திறனை பாதிக்கும் அளவிற்கு அலறியபோதும், சம்பந்தப்பட்ட காரில் இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை.
உடனே ஆவேசமடைந்த சில வாகன ஓட்டிகள் அந்த காரை ஓவர்டேக் செய்தனர். அப்போது, அங்கு பார்த்த காட்சி அவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. உள்ளே ஓட்டுநர் இருக்கையில் 6 வயது சிறுமி அமர்ந்து கொண்டு காரை மெதுவாக ஓட்டியுள்ளார். அருகே அவரின் தாத்தா அமர்ந்து கொண்டு சிறுமிக்கு ஓட்டுநர் பயற்சி அளித்துள்ளார். அதைக் கண்டு ஆத்திரத்தில் காரை வழிமறித்த வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், அதை பொருட்படுத்தாத நபர் கூலாக அப்படித் தான் சிறுமியை கார் ஓட்ட வைப்பேன் என்ற தொணியில் பேசியிருக்கிறார். மேலும், சிறுமியிடம் கேட்டதற்கு தனது தாத்தா போலீஸ்காரர் என்று மழலை மொழியில் அப்பாவியாக கூறியுள்ளார். குழந்தை கூட தான் செய்தது தவறு என்ற உணர்ந்து கொண்டு டிரைவர் சீட்டில் இருந்து எழுந்து பின் இருக்கைக்கு சென்றது. ஆனால், போலீஸ்காரரான அந்த நபர் உங்களால் என்ன செய்ய முடியும் என்று எகத்தாளமாக பேசியுள்ளார். அதைக் கேட்டு சூடான மக்கள் ஆர்டிஓ ரூல்ஸ் உங்களுக்கு தெரியாதா என கேள்வி கேட்டதுடன், சாலை என்ன விளையாட்டு மைதானமா? அல்லது உங்க வீட்டு சொத்தா என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
சாலை விதி மீறுபவர்களை தட்டிக் கேட்க வேண்டிய நீங்களே, பொறுப்பில்லாமல் செயல்படுதா? என்றும் பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இறுதியாக வெளியே இறங்கி வந்த போலீஸ்காரர், டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு காரை ஓட்டிச் சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி ஐதராபாத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோ போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றுள்ளது. விசாரணையில் சிறுமியுடன் காரில் வந்தவர் ஐதராபாத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் பூஜாரி திருப்பதய்யா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆறு வயது பேத்திக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்ததுடன், சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவரை பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் ஆய்வாளரே அதை காற்றில் பறக்கவிட்டு அலட்சியம் காட்டிய சம்பவம் ஐதராபாத்தில் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Hyderabad,Telangana
6 வயது பேத்திக்கு கார் ஓட்ட பயிற்சி.. சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்.. தெலங்கானாவில் அதிர்ச்சி!


