இனி எல்லா பொருளும் விலை ஏறப்போகுது! 9.87 சதவீதமாக அதிகரித்த பணவீக்கம்! ஷாக் கொடுக்கும் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
சில காலமாக எங்கு பார்த்தாலும் விலை உயர்வு தென்படுகிறது. மளிகை பொருட்கள் தொடங்கி பால் பாக்கெட் வரை விலைவாசி அதிகரித்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 9.87 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 9.15 சதவீதம் வரை பணவீக்கம் அதிகரித்திருக்கிறது.
மொத்த விலை பணவீக்கம் என்றால் என்ன?: மொத்த விலை பணவீக்கம் என்பது ஒரு வியாபாரி தனக்கு தேவைப்படும் பொருட்களை மொத்தமாக தொழிற்சாலைகள் அல்லது விவசாயிகளிடமிருந்து வாங்குவார். அப்போது அந்த வியாபாரிக்கு விற்பனை செய்யப்படும் விலை தான் இது. மூலப்பொருட்களின் விலை அதிகரித்தால் தொழிற்சாலைகளும் வியாபாரியிடம் அதிக பணத்தை வசூலிப்பார்கள். அப்போது அங்கு பணவீக்கம் அதிகரிக்கும். இதனால் வியாபாரிகளும் வேறு வழியின்றி நுகர்வோர் மீது வைப்பார்கள்.
மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்தால் நுகர்வோர் ஆகிய நாமும் பாதிக்கப்படுவோம். எப்பொழுதெல்லாம் மொத்தவிலை பணவீக்கும் உயர்கிறதோ அது எதிர்காலத்தில் சில்லறை பணவீக்கத்தையும் அதிகரிக்கப் போகிறது என்று அர்த்தம்.

கடந்த மே மாதம் 9.68 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் அதையும் தாண்டி 9.87 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை மற்றும் உற்பத்தி செலவு காரணமாகவே பணவீக்கம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
சந்தையில் உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்க குறியீடு மே மாதம் 4.49 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் இந்த விகிதம் 6.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களான தக்காளி, வெங்காயம் போன்றவற்றின் விலை அதிகரித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்தாலும் எரிபொருள் மற்றும் எரிசக்தி பிரிவுக்கான பணவீக்கம் மே மாதம் இருந்ததை விட ஜூன் மாதத்தில் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 30.33% இருந்த விகிதம் ஜூன் மாதத்தில் 27.41 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் பணவீக்கம் 7.48 சதவீதமாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த முறை ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க விகிதத்தை அரசு 8.36% மாற்றி உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே கணிக்கப்பட்ட 8.26 சதவீதம் 8.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போனால் இறுதியில் சாமானியர்களின் பாக்கெட்டுக்கும் ஆபத்து. இருப்பினும் காய்கறி, பருப்பு மற்றும் எரிபொருள் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தால் கொஞ்சம் சமாளிக்க முடியும். பணவீக்கத்தை சீராக்க ரிசர்வ் வங்கி என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
