Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தவெக குதிரை பேரம் செய்வதாக சில ஆதாரங்களுடன் ஆளுநரிடம் எதிர்க்கட்சியான திமுக புகார் அளித்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து இரண்டு விதமான சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. இரண்டுமே தவெகவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாட்டின் அரியணை ஏறியுள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தவெக அரசுக்கு மிகக் கடுமையான அரசியல் மற்றும் சட்ட நெருக்கடி உருவாகியுள்ளது.
தவெக தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ‘குதிரை பேரம்’ செய்வதாக ஆளுநரிடம் எதிர்க்கட்சியான திமுக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் புகாரளித்த திமுக
சட்டமன்ற உறுப்பினர்களை தவெக விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் திமுகவின் முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் அக்கட்சியின் வழக்கறிஞர் அணி முறையிட்டுள்ளது.
தங்களது ஆட்சியைத் தக்கவைக்கவும், பெரும்பான்மையை பலப்படுத்தவும் எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை அச்சுறுத்தியும், நிதி கொடுத்ததும், ஆசை வார்த்தைகள் காட்டியும் தவெக இழுப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான முறையான விசாரணை கோரி சில முக்கிய ஆதாரங்களையும் ஆளுநரிடம் திமுக சமர்ப்பித்துள்ளது.
விஜய்க்கு வரப்போகும் 2 பெரிய சிக்கல்கள்!
ஆளுநரிடம் திமுக அளித்துள்ள இந்தப் புகாரைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் சட்ட நிபுணர்களின் கணிப்புப்படி இந்த விவகாரத்தில் அடுத்ததாக இரண்டு விஷயங்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
வாய்ப்பு 1 – ஆளுநரின் அதிரடி நடவடிக்கை: திமுக கொடுத்துள்ள ஆடியோ, வீடியோ மற்றும் வாக்குமூல ஆதாரங்களின் அடிப்படையில், இந்த குதிரை பேரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு ஏற்படும்.
வாய்ப்பு 2 – திமுகவின் நீதிமன்ற வழக்கு: ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் பட்சத்தில், இந்த ஆதாரங்களை வைத்து திமுக நீதிமன்றத்தை நாடி, நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை கோரி வழக்குத் தொடரலாம். ஏற்கனவே இதுதொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற கவனத்திற்குச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் எது நடந்தாலும், முதல்வர் விஜய் மற்றும் தவெகவிற்கு அது மிகப்பெரிய சட்ட சிக்கலாக மாறும். ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பக் கட்டத்திலேயே இத்தகைய தீவிர விசாரணை வளையத்திற்குள் தவெக அரசு தள்ளப்பட்டால், அது தவெக தலைமைக்கு அரசியல் ரீதியாகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆளுநர் மாளிகை எடுக்கப்போகும் அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தமிழக அரசின் எதிர்காலம் அமையப் போகிறது.
திமுக முன்வைக்கும் 2 முக்கிய ஆதாரங்கள்
ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரில் திமுக இரண்டு முக்கிய விவகாரங்களை முதன்மை ஆதாரங்களாக சுட்டிக்காட்டியுள்ளது.
வைகோவின் பகிரங்கக் குற்றச்சாட்டு
திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மதிமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சின்னத்தில் மீண்டும் போட்டியிடுமாறு முதல்வர் விஜய் தரப்பு வற்புறுத்தியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலாக அவர்களுக்குப் பெரிய அளவில் நிதியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை காட்டப்பட்டதாக வைகோ கூறியதை திமுக முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளது.
கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வாக்குமூலம்
அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் விவகாரமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. தங்களை கட்சி மாறச் சொல்லி தவெக தலைமை தொடர்ந்து அணுகியதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும்படி கூறியதாகவும் அவரே ஒப்புக்கொண்டதை திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

